டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.354 கோடி ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை எண்ணும் பணி இன்னும் முடியாத நிலையில் பிரதமர் மோடி வீடியோ பதிவிட்டு ‛மணி ஹெய்ஸ்ட்' எனக்கூறி காங்கிரஸ் கட்சியை கலாய்த்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ் சாகு. இவர் நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். கடந்த 2018 ம் ஆண்டு அவர் ராஜ்யசபா எம்பியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவருக்கு வயது 64. பிரபல தொழிலதிபரான இவர் மதுபானம் சார்ந்த நிறுவனங்கள் நடத்தி வருகிறார். ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மதுபான நிறுவனங்கள் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6ம் தேதி தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது லாக்கர் மற்றும் மூடைகளில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
இதையடுத்து கூடுதலாக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் பணம் எண்ணும் பணி முடியவில்லை. தற்போது வரை ரூ.354 கோடி வரை கணக்கில் காட்டாத பணம் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பணம் எண்ணும் பணி நடைபெறுவதால் இதன் மதிப்பு என்பது இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான இடத்தில் சிக்கிய இந்த பணத்தை பார்த்து இந்தியாவை ஷாக்காகி உள்ளது. மேலும் இந்திய வரலாற்றில் ஒரு ரெய்டில் கிடைத்த அதிகபட்ச பணமாக இது உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
குறிப்பாக பாஜக சார்பில் தீரஜ் சாகுவின் வீட்டில் சிக்கிய பணம் தொடர்பான வீடியோக்களை வலைதளங்களில் பரவ செய்யப்பட்டு வருகிறது. அப்படியாக இன்று பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை ரீபோஸ்ட் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கலாய்த்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்தியாவில் மணி ஹெய்ஸ்ட் புனைவுக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்கள் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்த வரலாறு கொண்டவர்கள். ஊழல் பணத்தை எண்ணும் பணி இன்னும்தான் தொடர்கிறது'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி பணக்கொள்ளை அடிக்கும் கட்சி என அவர் கலாய்த்துள்ளதோடு காட்டமாக விமர்சனமும் செய்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage