சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டிய அதேநேரத்தில், தனது குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 2022ல் எடப்பாடி தரப்பு பொதுக்குழு நடத்தியபோது, அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது.
சென்னை வானகரத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்குழுவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வரும், அதிமுக உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பொங்கலிட்டு வழிபாடும் நடத்தினார். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஜூலையில், இதேபோல அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அன்றைக்கு காலை சரியாக 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.
ஓ.பன்னீர்செல்வமோ, தனது பிரச்சார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்திற்குப் புறப்பட்டார். அப்போது, அதிமுக அலுவலகத்தின் முன் திரண்டிருந்த ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு மூண்டது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் நாளில் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் நடைபெறலாம் என்று எடப்பாடி சார்பில் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையரகத்தில் பாதுகாப்பு கோரி மனு கொடுத்திருந்தார்.
ஆனாலும், அன்று போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிமுக தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்து உள்ளே சென்று அலுவலகத்தையே சூறையாடினர். ராயப்பேட்டையே ரத்தக்களறியானது.
அதேசமயம், வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். இந்த சிறப்புத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த்துறை சீல் வைத்தது. அதிமுகவினர் இடையிலான மோதலைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கட்சி அலுவலக சாவி எடப்பாடி தரப்பின் வசம் சென்றது.
தொடர்ந்து, சட்டப் போராட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த ஓபிஎஸ், கட்சி வேட்டி, சின்னத்தை பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஓபிஎஸ். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட எடப்பாடி தரப்பும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
இப்படியான சூழலில் தான் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளார். அவர் பொதுக்குழு நடத்திய அதே நேரத்தில் தனது குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் ஓபிஎஸ். அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால் 2 ஆண்டுகளில் காட்சிகள் தலைகீழாக மாறியுள்ளன.