விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற திவ்ய பாசுரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அர்த்த மண்டபமும் கருவறை போன்றது எனவும், இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இளையராஜா வெளியே சென்றதாகவும் அவரை வெளியேற்றவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மார்கழி மாதம் துவங்கியிருக்கும் நிலையில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலியும் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள மாநிலங்களவை எம்பியும் இசையமைப்பாளருமான இளையராஜா வந்திருந்தார். அவருக்கும், கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோருக்கு மேல தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில்களில் மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்வு சர்ச்சையானது.
தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரங்க மன்னரை தரிசனம் செய்ததாக கூறப்படும் அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்கள், பட்டர்களுடன் செல்ல முயன்றார். ஜீயர்களும் பட்டர்களும் மண்டபத்திற்குள் சென்ற நிலையில் உள்ளே நுழைய முயன்ற இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதையடுத்து அர்த்தமும் மண்டப நுழைவாயிலில் இருந்து இளையராஜா தரிசனம் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த. நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை திட்டமிட்டு வெளியே அனுப்பியதாகவும், இது தீண்டாமையின் உச்சம் என சர்ச்சை எழுந்தது. கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டாள் கோவிலில் கருவறை போலவே அர்த்தமண்டபமும் பாவிக்கப்படுகிறது. அங்கு ஜீயர்கள், பட்டர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் எந்த பொது மக்களும் இதுவரை அர்த்தம் மண்டபத்திற்குள் சென்றதில்லை.
குறிப்பிட்ட நிகழ்வின்போது ஜீயருடன் இளையராஜா அர்த்தமண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்து விட்டார். இதை அடுத்து நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அவராகவே வெளியே சென்றார். மேலும் இளையராஜாவுக்கு கோவில் யானையை வைத்தோ வெண்குடை பிடித்து வரவேற்பு அளிக்கப்படவில்லை. தேவையில்லாமல் இதை சர்ச்சையாக்குகிறார்கள்" என விளக்கம் அளித்துள்ளனர்.
இளையராஜா: தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் இளையராஜா. வெறும் இசையமைப்பாளர் என்று மட்டும் அவரை சொல்லிவிட முடியாது. அன்னக்கிளி தொடங்கிய அவரது பயணம் லேட்டஸ்டாக சிம்பொனி வரை இசை உலகில் தொடர்கிறது.
ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள், 7000க்கும் அதிகமான பாடல்கள், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்திய சினிமாவில் இளையராஜாவுடன் பணியாற்றாத இயக்குனர்கள், நடிகர்களை கிடையாது என்னும் அளவுக்கு பல தலைமுறைகளை தாண்டிய உன்னத இசைக் கலைஞராக இளையராஜா இருக்கிறார்.
சிறந்த இசைக்கலைஞருக்கான தேசிய விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இளையராஜா பெற்றிருக்கிறார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பல நேரங்களில் இளையராஜாவை சுற்றியும், இளையராஜாவும் சில சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், தானாக வருவதும் உண்டு அப்படி ஒரு சர்ச்சை தான் இன்று ஏற்பட்டது.