டெல்லியில் இருந்து மைசூர் சென்று அங்கிருந்து தமிழ்நாடு வரும் அவர் முதுமலை யானைகள் முகாமில் ‛ஆஸ்கர்' வென்ற ஆவணப்படத்தின் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டும் நிலையில் மாலையில் சென்னை செல்கிறார். இதற்கிடையே தான் திரெளபதி முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 3 நாள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளார். இந்த வேளையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் இன்று காலை 11 மணியளவில் திரெளபதி முர்மு புறப்படுகிறார்.
டெல்லியில் இருந்து அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் விமான நிலையத்துக்கு செல்கிறார். மைசூர் விமான நிலையத்துக்கு மதியம் 3 மணியளவில் வரும் திரெளபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாடு புறப்படுகிறார்.
தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு மதியம் 3.30 மணிக்கு திரெளபதி முர்மு வருகிறார். அதன்பிறகு அவர் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்த வேளையில் ‛ஆஸ்கர்' வென்ற எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அவர் சந்தித்து பாராட்ட உள்ளார்.
அதன்பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் அங்கிருந்து மைசூர் புறப்பட்டு செல்கறார். அதன்பிறகு மைசூரில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். இரவு 7 மணிக்கு சென்னை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டவர்கள் வரவேற்கின்றனர். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார்.
இதையடுத்து நாளை காலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
அதன்பிறகு ஆளுநர் மாளிகை செல்லும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிறகு நாளை மதியம் 3.30 மணியளவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்குமு் பாரதியார் படத் திறப்பு விழாவில் பங்கேற்று தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை சூட்ட உள்ளார்.
இரவு 8 மணிக்கு ஆளுநர் ஆர்என் ரவி விருந்து அளிக்கிறார். இதிலும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு இரவில் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.