டெல்லி: அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழிக்கும் வகையில் அணுஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்க பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது. இதனை மோப்பம் பிடித்த அமெரிக்கா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடும் 4 நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை அதிரடியாக விதித்து அந்த திட்டத்தை மொத்தமாக முடக்கி மூக்கை உடைத்துள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் இந்த ஏவுகணை திட்டத்துக்கும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கும் பின்னணியில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான்.. நமது அண்டை நாடு தான். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, நமக்கு சொந்தமான காஷ்மீரை உரிமை கொண்டாடுவது உள்ளிட்டவற்றால் நம்முடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இந்த மோதல் என்பது இப்போது வந்தது இல்லை.
நம் நாட்டின் ஒருபகுதியாக இருந்து பிரிந்ததில் இருந்தே இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை மூக்கை நுழைத்து நம்மிடம் வம்பு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இப்படி வீணாக வம்பு இழுப்பதால் நம் நாடும் உரிய பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் மூக்கை உடைத்து வருகிறது. ஆனாலும் திருந்தமாட்டோம் என்ற வீண் வீராப்பில் முஷ்டி முறுக்கி வருகிறது இந்த பாகிஸ்தான்.
இப்படி நம்முடன் மோதலை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான், இப்போது உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே குறிவைக்கும் ஏவுகணையை தயாரிக்க முயன்று வருகிறது. அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே நல்ல உறவு என்பது இப்போது இல்லை. அதேவேளையில் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இத்தகைய சூழலில் தான் அமெரிக்காவை குறிவைத்து பாகிஸ்தான் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையை தயாரிக்க ஸ்கெட்ச் போட்டு அடி வாங்கி இருக்கிறது. அதாவது அமெரிக்காவையே தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை தயாரிக்கும் முயற்சியை மோப்பம் பிடித்த அமெரிக்கா, பாகிஸ்தானின் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தை தவிடுபொடியாக்கி பாகிஸ்தானை கதற விட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அதாவது ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணுஆயுதங்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. நம்முடன் மோதலை கடைப்பிடிக்கும் பாகிஸ்தான் நம் நாட்டு ராணுவ பலத்தை ஒப்பிடும்போது மிகவும் வலிமை குறைந்தது. அதாவது பாகிஸ்தானை ஒப்பிடும்போது பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னேறிய நிலையில் நம் நாடு உள்ளது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஏவுகணை தயாரிப்பில் கலக்கி வருகிறது.
வல்லரசு நாடுகளுடன் போட்டிப்போடும் அளவு ஏவுகணை தொழில்நுட்பத்தில் அசாத்திய இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் ஏவுகணை பிரிவில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது பாகிஸ்தான் தனது பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளையும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இப்போதைக்கு பாகிஸ்தானிடம் உள்ள சக்தி வாய்ந்த ஏவுகணை என்றால், அது Shaheen-3 தான். இதை வைத்து அதிகபட்சமாக 2,750 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்க முடியும். அப்படி பார்த்தால் இந்த ஏவுகணையை வைத்து இந்தியாவின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்க முடியும். அதேபோல் தற்போது அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வரும் ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான் தாக்க முடியும். இதனால் ஷாகின் -3 ஏவுகணையை பாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
பாகிஸ்தான் நிலைமை இப்படி இருக்க நம் நாட்டிடம் ஆகாஷ், பிரித்வி, திரிசூல், அக்னி, பிரமோஸ் என விதவிதமான எவுகணைகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை தரை பகுதி, கடல் பகுதி, வான்வெளியில் இருந்து ஏவி எத்தகைய இலக்குகளையும் தாக்கி அழிக்க முடியும். சமீபத்தில் கூட கடலில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி நம் நாடு சாதனை படைத்தது. நாடு விட்டு நாடு பறக்கும் ஏவுகணை மட்டும் இன்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் நம் ராணுவத்திடம் இருக்கின்றன. அதிகபட்சமாக 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை கூட துல்லியமாக அடிக்க முடியும். இது பாகிஸ்தானின் உச்ச சக்திவாய்ந்த ஏவுகணை பலத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம். இந்தியா வசம் உள்ள பெரும்பாலான ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உண்டு.
இதனால் பாகிஸ்தான் நம்மை தாக்கினால் அதனை விட பலமடங்கு வேகத்தில் நம்மால் பாகிஸ்தானை தாக்க முடியும். இப்படிநம் நாட்டின்ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதை முறியடிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (Intercontinental Ballistic Missiles) சக்தி வாய்ந்த ஏவுகணை தயாரிக்கும் திட்டத்தை பாகிஸ்தான் தொடங்கியது. இந்த திட்டத்தை பாகிஸ்தானின் தேசிய நிறுவனமான இஸ்லாமபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்டிசி எனும் National Defence Comples, மற்றும் அந்த நாட்டை சேர்ந்த அக்தர் மற்றும் சன்ஸ் பிரைவேட் லிமிடெட், அபிலியேட்ஸ் இன்டர்நேஷன் மற்றும் ராக்சைட் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கியது.
ஆனால் இந்த ஏவுகணை திட்டத்தில் மிகப்பெரிய சதி இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்து விட்டது. அதாவது, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வான்வெளி தூரம் 12 ஆயிரம் கிலோ மீட்டரை விட அதிகம். இவ்வளவு தூரம் வரை சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டதை அமெரிக்கா கண்டுபிடித்தது. இதை அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் தான் வெளிப்படுத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விண்வெளி வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது'' என்று குறு்றம்சாட்டினார்.
மேலும் பாகிஸ்தானின் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் குறி வைக்கும் வகையில் தான் தொடங்கப்பட்டுள்ளதாக நிபுணர்களும் கூறினர். இதையடுத்து ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் தேசிய நிறுவனம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 3 தனியார் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு முயற்சிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கின்றன. ஆனால் அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே தான் இந்த திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் பெயர் அடிபடுகிறது. அதாவது நம் நாடு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ஏவுகணை தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உள்ளது. இதனால் வந்த காழ்ப்புணர்ச்சி, மற்றும் நம் நாட்டுடன் உள்ள பகை உணர்வு உள்ளிட்டவற்றால் தான் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததும், ஆனால் தற்போது அந்த முயற்சி முடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா எந்த பொருளாதார தடைகளையும் விதிக்காமல் இருந்து வந்தது. அதாவது 1998க்கு பிறகு பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு தடை விதிக்காத அமெரிக்கா இப்போது 26 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தடை விதித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் சார்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு முயற்சியை யாரும் தடுக்க முடியாது என்று அந்த நாட்டை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
இதுபற்றி ராணுவ அதிகாரிகள் மற்றும் அந்த நாட்டு அரசியல்வாதிகள் கூறுகையில், ‛‛ அமெரிக்காவின் தண்டனையை பாகிஸ்தானால் ஏற்க முடியாது. இது முற்றிலும் ஒருதலைபட்சமானது. இந்தியா பல்வேறு ரக ஏவுகணைகைள தயாரிக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பல வகை ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளன.தொடர்ச்சியாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா சோதித்து வருகிறது. இது பற்றி பல முறை அமெரிக்காவிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுக்கவில்லை. தற்போது எங்களின் ஏவுகணை தயாரிப்பை முடக்க நினைக்கின்றனர். அமெரிக்கா பொருளாதார தடை போட்டாலும் பாகிஸ்தானின் ஏவுகணை தயாரிப்பு முயற்சிகளை தடுக்க முடியாது. இதற்கு முன்பும் பல முறை பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் பாகிஸ்தான் முயற்சியை தடுக்கவில்லை'' என்று முஷ்டி முறுக்குகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியை முதலியே அமெரிக்கா முடித்து விட்டுள்ளது என்பது தான்.