இனி சூப்பர் பாஸ்ட் அல்ல! சென்னை - பெங்களூர் ரயிலில் வரப்போகுது மாற்றம்.. ஆனாலும் ஒரு குட் நியூஸ்

post-img
சென்னை: சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டு வரும் இண்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக இனி இயக்கப்படாது எனவும் சாதாரண ரயிலாக இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் சாதாரண விரைவு ரயில்களாக குறைக்கப்படுவதால், கட்டணமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள மிக முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக சென்னை - பெங்களூர் ரூட் உள்ளது. இரு மெட்ரோ நகரங்களுக்கு இடையேயான பல்வேறு காரணங்களுக்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இதனால், சென்னை - பெங்களூர் வழித்தடம் எப்பொதும் படு பிசியாக இருக்கும் ரூட்களில் ஒன்றாக உள்ளது. சென்னை பெங்களூர் ரூட்: சாலை வழி பயணமாக இருந்தாலும் சரி.. விமானத்தில் சென்றாலும் சரி.. ரயிலில் சென்றாலும் சரி.. எந்த வழி பயணமாக இருந்தாலும், பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்லவே அதிக ஆர்வம் காட்டுகிறர்கள். பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து பெங்களூர் வழித்தடத்தில், சுமார 26 ரயில்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. சாதாரண ரயிலாக மாற்றம்: இந்த வழித்தடத்தில் ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களும் இயக்கப்படுகின்றன. அதுபோக பல்வேறு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டு வரும் இண்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக இனி இயக்கப்படாது எனவும் சாதாரண ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ஜனவரி 3 முதல்: வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது. சூப்பர் பாஸ்ட் ரயில் என்றாலும் இந்த ரயில் நிறுத்தப்படும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ரயில் செல்லும் வேகமும் குறைந்துள்ளது. எனவே, இந்த ரயிலை சூப்பர் பாஸ்டிற்கு பதிலாக சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற தென்மேற்கு ரயில்வே முடிவு செய்தது. சாதாரண விரைவு ரயிலாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ரயிலுக்கு நிறுத்தங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ரயில்கள் வேகம் குறைப்பு: இந்த ரயில் மட்டும் இன்றி மேலும் 4 ரயில்களின் வேகம் குறைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ரயில்கள் சாதாரண விரைவு ரயில்களாக குறைக்கப்படுவதால், கட்டணமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு இருக்கை டிக்கெட்டில் பயணிக்க ரூ.15ம், சேர் கார் கோச்சில் ரூ.45 வரையும் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. 54 கிமீ வேகம்: சென்னை - மைசூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12609 / 12610-ல் இருந்து 16551/16552 என ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து மாற்றப்படுகிறது. இந்த ரயில் தற்போது சென்னை செண்ட்ரலில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு இரவு 7.55க்கு சென்றடையும். மைசூருக்கு இரவு 10.50 மணிக்கு சென்று சேரும். 23 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். 497 கிலோ மீட்டர் தொலைவை கடக்க 9 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது. இந்த ரயில் சராசரியாக 54 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த ரயில் முதலில் சென்னையில் இருந்து பெங்களூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் 2019-ல் இருந்து மைசூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Post