விசிகவில் இணைந்த 21 நாட்களில் பதவி.. 11 மாதங்களில் கட்சியில் இருந்தே விலகல்! யார் இந்த ஆதவ் அர்ஜுனா

post-img
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில காலமாகவே தனது பேச்சுகள் மூலம் சலசலப்பை ஏற்படுத்தி வந்தவர் ஆதவ் அர்ஜுனா.. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, விசகவில் இணைந்து ஓராண்டுக்குள் விலகியுள்ளார். ஆனால், இந்த ஓராண்டுக்குள் அவர் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். யார் இந்த ஆதவ் அர்ஜுனா.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதவ் அர்ஜுனா கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.. ஆதவ் அர்ஜுனாவின் தாய் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் சகோதரி ஆவர். ஆதவ் அர்ஜுனா: ஆதவ் அர்ஜுனாவுக்கு 5 வயதாகும் போதே அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர்களின் குடும்பத்திற்குப் பெரிய வருமானம் இல்லாமல் இருந்ததாகவும். இதனால் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார். தாய் உயிரிழன்துவிட்டதால்.. உறவினர் ஒருவரின் பாதுகாப்பிலேயே ஆதவ் அர்ஜுனா வளர்க்கப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்ஸி என்பவரை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இப்போது கூட இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார் அரசியல் பயணம்: விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அப்போது நமக்கு நாமே என்ற பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டார். அந்த பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருந்ததாகக் கூறப்படுகிறது. "கனத்த இதயத்துடன்.. விசிகவில் இருந்து விலகுகிறேன்.." ஆதவ் அர்ஜுனா திடீர் அறிவிப்பு அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து விலகிய இவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றத் தொடங்கினார். இந்தாண்டு தொடக்கத்தில் விசிக சார்பில் திருச்சியில் "வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டையும் ஒருங்கிணைத்தார். விசிக: அந்த மாநாட்டில் தான் திருமாவளவன் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தார். அதன் பிறகு வெறும் 21 நாட்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலிலும் கூட அவர் விசிக சார்பில் போட்டியிட இருந்தார். இதற்காகவே விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பொதுத் தொகுதி கிடைக்காததால் அந்த தேர்தலில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடவில்லை. அதேநேரம் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அவர் திமுகவை விமர்சித்துப் பேசத் தொடங்கினார். குறிப்பாக விசிக கூட்டணி இல்லாமல் வடதமிழகத்தில் திமுகவால் வெல்ல முடியாது என்றது பெரும் சர்ச்சையானது. சினிமாவில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்கள் துணை முதல்வராகும் போது, 40 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராகக் கூடாது என்று இவர் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. சர்ச்சை: அதைத் தொடர்ந்து நடந்தது தான் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதில் 2026இல் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்.. பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வராகக் கூடாது என்றெல்லாம் பேசினார். அது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து 6 மாதங்கள் அவரை சஸ்பெண்ட் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Post