சென்னை: அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சட்ட சபைகளுக்கான தேர்தலை ஒரே காலத்தில் நடத்தி முடிக்கும் வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பல நாட்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
நேற்று மக்கள் அவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய விவாதம் முடிவடைந்த பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்," பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள்.
கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஆவது இடம் கிடைக்கும். அம்பேத்கரின் பெயரை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்துங்கள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அம்பேத்கர் ராஜினாமா செய்தார். பட்டியலின சாதிகள் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என அம்பேத்கரை பலமுறை கூறியிருக்கிறார்" என பேசினார்.
இதை அடுத்து அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அமித் ஷாவின் பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்த பேச்சுக்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" என கூறியுள்ளார். ஆனால் இந்த பெயரில் பாஜக, மத்திய அரசு, அமித் ஷா ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.