சென்னை: சென்னையில் கணவனிடம் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் தங்கிய பெண்ணுக்கு கனவில் கூட எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆயுப்கான் என்பவரின் மனைவியான பதர்நிஷா என்பவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு தோழி வீட்டில் தங்கியுள்ளார். அவரிடம இருந்து சுமார் 70 பவுன் தங்க நகையும், ரூ.4 லட்சம் பணமும் திருடப்பட்டுள்ளது. எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
கணவரிடம் சண்டை போடும் மனைவி திடீரென கோபித்துக் கொண்டு அவரது அம்மாவிற்கு செல்வது வழக்கம். சிலர் தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது நீண்ட கால தோழிகளின் வீட்டிற்கு கூட பெண்கள் செல்வது வழக்கமாக உள்ளது. சில நாட்கள் பெற்றோர் அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள், அதன்பின்னர் சமாதானம் ஆகி கணவரின் வீட்டிற்கு திரும்புவார்கள்.. அப்படி ஒரு பெண் கணவனிடம் கோபித்துக் கொண்டு பெட்டியோடு தோழியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி வந்த பெண்ணுக்கு கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. யார் அந்த பெண், என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவைச் சேர்ந்த முகமது ஆயுப்கான் என்பவர் அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலையில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பதர்நிஷா என்ற பக்ருநிஷாபேகம். இவருக்கு 54 வயது ஆகிறது. முகமது ஆயுப்கான் பதர்நிஷா நிஷா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மாதமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதர்நிஷா, கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்த 70 பவுன் நகை, ரூ.4 லட்சம் மற்றும் துணிகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு ஏழுகிணறு பிரம்மானந்தா தெருவில் வசிக்கும் தனது தோழி வீட்டுக்கு சென்று ஒரு மாதம் தங்கியிருக்கிறார்
இந்தநிலையில் முகமது ஆயுப்கான், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். இதையடுத்து பதர்நிஷா, நகை, பணம் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 70 பவுன் நகை, ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோழி வீட்டில் தங்கி இருந்தபோது நகை, பணம் மாயமாகி இருப்பதால் இதுபற்றி தோழியிடம் கேட்டதற்கு அவர் தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி பதர்நிஷா தனது கணவரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த முகமது ஆயுப்கான், இதுபற்றி ஏழுகிணறு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பதர்நிஷா நகை, பணத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு கணவருக்கு பயந்து திருட்டுப்போனதாக நாடகமாடுகிறாரா? அல்லது அவரது தோழியே திருடினாரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.