சென்னை: சமூக ஊடகங்கள் படம் வெளியாகி 3 நாட்கள் ஆகும்வரை மக்கள் கருத்தைக் கேட்டு வீடியோ வெளியிடக் கூடாது என்று TFAPA சங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படம் வசூல் ரீதியாக மட்டுமல்ல; விமர்சன ரீதியாகவும் படு தோல்வியை அடைந்தது. இந்தப் படம் அளவுக்கு ரசிகர்கள் கொந்தளித்துப் பேசிய வேறு படம் ஒன்று இல்லை என்ற சொல்லும் அளவுக்குக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. இந்த மாதிரியான விமர்சனங்களால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாகத் திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்திருந்தார். மேற்கொண்டு அவர் படம் வெளியான சில நாட்கள் வரை யூடியூப் சேனல்கள் மக்கள் கருத்தை எடுத்து வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு யோசனையை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி Tamil Film Active Producers Association ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் படம் வெளியான 3 நாட்கள் வரை சமூக ஊடகங்கள் விமர்சனங்கள் வெளியிடத் தடைக் கேட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அதைப் போன்று முன்னதாகவே கேரள சினிமா துறையினர் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் அனைத்து சமூக ஊடகங்களும் தவறான விமர்சனங்களை வெளியிடுவது இல்லை. குறிப்பிட்ட சிலர்தான் அவ்வாறு செய்கின்றனர். ஆனால் அவர்களை மட்டும் தடுக்க முடியாது என்பதால்தான் இந்த ஒட்டுமொத்த தடையைக் கொண்டுவர உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவின் கையெழுத்து டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்தக் கையெழுத்து போலியானது என்றும் பாரதிராஜா சுயநினைவே இல்லாமல் இருக்கும்போது அவர் எப்படி அறிக்கையில் கையெழுத்துப் போட முடியும் என்று குற்றச்சாட்டை ஒருவர் யூடியூபில் வைத்திருந்தார்.
இதற்குப் பின்னால் பொருளாளராகப் பொறுப்பில் உள்ள தனஞ்செயதான் காரணம் என்றும் அவர் ஏற்கெனவே யுடிவி உட்படப் பல நிறுவனங்களை நஷ்டத்தை உண்டாக்கி மூடிவிட்டு வந்தவர் என்றும் வரிசையான குற்றச்சாட்டை வைத்திருந்தார். இந்தச் சர்ச்சை தொடர்பாகச் சங்கப் பொருளாளரான தனஞ்செயன் மீது வைக்கப்பட்ட குற்றஞ்சாட்டுக் குறித்து அவர் ஒரு சட்டப்பூர்வமான அறிக்கையை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தன் மீது தனிமனித தாக்குதல் நடத்துபவர்கள் மீது சட்டப்படி வழக்கறிஞரிடம் ஆலோசித்து வழக்கு தொடர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தச் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்துள்ள தனஞ்செயன், "கடந்த 4 வருடங்களாகச் சங்கம் செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட அறிக்கைகளை இதுவரை வெளியிட்டுள்ளோம். அதில் எல்லாம் பாரதிராஜா டிஜிட்டல் கையெழுத்துதான் பயன்படுத்தி இருக்கிறோம். அவை எல்லாம் போலியா? சுயநினைவு இல்லாதவராக பாரதிராஜா இருந்தால் அவர் எப்படி மலேசியா போக முடியும்? விமான அதிகாரிகள் விட்டுவிடுவார்களா?
ஒரு சங்கம் எடுத்த முடிவுக்காக என்னை டார்கெட் செய்து தனிமனித தாக்குதல் நடத்துவது சரியா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கும் அவரது அறிக்கை குறித்து பலர் அவருக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றன. அதே நேரம் சிலர் '2000 கோடி ரூபாயை 'கங்குவா' வசூல் செய்யும் என உருட்டியவர்தானே நீங்கள் ?' என எஸ்.எஸ். மியூசிக் வெளியிட்ட வீடியோவின் கீழ் கருத்திட்டும் வருகின்றனர்.
Moser Baer மற்றும் யுடிவி போன்ற நிறுவனங்களுக்கு நஷ்டமடைய அங்கே பணியாற்றிய தனஞ்செயன் காரணம் என்றும் இவருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் பேசி இருந்தார். அதற்கு தனஞ்செயன், "நான் ஒரு தொலைத் தொடர்பு பன்னாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆர்வத்தால் 2005 இல் Moser Baer போனேன். இது சினிமா படங்களை சிடியாக வெளியிடும் கம்பெனி. அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதித்தது. ஒரு படம் வெளியான 30 நாட்களில் சிடியில் வரவேண்டும் என முயன்றோம். அதைத் தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. அதனால் Moser Baer சொந்தமாக சினிமா தயாரித்து 30 நாட்களில் அதை வெளியிட முயன்றது.
அப்படிதான் சினிமா தயாரிக்க வந்தோம். இது 2007 இல் நம்பர் 1 கம்பெனியாக மாறியது. இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் எனப் பல படங்களைத் தயாரித்தது. சிடி தயாரிப்பு கம்பெனி ஒரு கட்டத்தில் அதிக வரி விதிப்பால் நஷ்டமானது. 2009 இல் சிக்கல் ஏற்பட்டு 2010 இல் மூடினார்கள். ஆயிரக் கணக்கான பேர் வேலை செய்த கம்பெனி Moser Baer சிடி கம்பெனி. நான் அதில் இல்லை. சினிமா தயாரிப்பில்தான் இருந்தேன். நான் ஒருவன் ஒட்டுமொத்த கம்பெனி மூடியது காரணம் என்றால் யாராவது நம்புவார்களா? வெற்றி பெற்ற கம்பெனியை நஷ்டமான கம்பெனி என யாராவது சொல்வார்களா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இவர் பெயர் குறிப்பிடாமல் பேசி இருப்பது பத்திரிகையாளர் பிஸ்மியை பற்றித்தான். அவர் பெயர் சொல்லாமலே முழு விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்.