நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்-3.. அடுத்து என்ன?

post-img

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை இரவு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 26ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உந்தித் தள்ளப்பட்டது.

இந்நிலையில், நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நுழைந்துள்ளது. இன்று இரவு 7.15 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது சந்திரயான். நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது.

இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ தூரம் சந்திரயான் 3 விண்கலம் பயணித்துள்ளது. தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையால் இயக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை நாளை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) இரவு 11 மணிக்கு மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும், அடுத்த 19 நாள்கள் மிக முக்கியமானமவை என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Post