வாஷிங்டன்: வட கொரியாவில், கொரோனா காலத்திற்கு பிறகு தம்பதிகல் விவகாரத்து செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், விவகாரத்து என்பது சமூக கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்று கருதும் வடகொரியா நிர்வாகம், விவாகரத்து செய்யும் தம்பதிகளை உடனடியாக தடுப்பு காவலில் எடுத்து சென்று அவர்களுக்கு கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மர்ம பிரேதசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் கிம் ஜாங் உன் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகத்திற்கு தெரியாது. திறந்த வெளி சிறையில் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை அந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
நாட்டு மக்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், சிகை அலங்காரம் செய்வதில் கட்டுப்பாடு, குறிப்பிட்ட பெயர்களை வைக்க கட்டுப்பாடு என மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கொடூரமான தண்டனை கொடுப்பது அந்நாட்டில் உள்ளது. குறிப்பாக தென்கொரிய நாடகங்களை திருட்டுத்தனமாக பார்த்ததாக கூறி சிறுவர்க்ளுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குடும்பத்தில் ஒருவர் தப்பு செய்தால், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தண்டனை என சினிமாவை விட கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் உள்நாட்டில் இப்படி கெடுபிடி என்றால் தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் வடகொரியா சவால் விட்டு வருகிறது. கடுமையான பஞ்சம், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்நாடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஆகியவற்றை மேற்கோண்டு வருகிறது.
கொரோனா காலத்தில் அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. இதனால், கொரோனாவிற்கு பிறகு வடகொரியாவில் விவகாரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், விவகாரத்து என்பது சமூக கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் வடகொரியா நிர்வாகம், விவாகரத்து செய்யும் தம்பதிகளை உடனடியாக தடுப்பு காவலில் எடுத்து சென்று கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்களாம்.
ராணுவத்தில் லேபராக சேர்க்கப்பட்டு மிகக் கடுமையான வேலைகளை வாங்கி அடிமைகளை போல நடத்தி மனித உரிமை மீறலில் வடகொரியா ஈடுபடுவதாக தென்கொரியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் விவாகரத்து செய்வதற்கு கூட தம்பதிகள் அச்சப்படும் சூழல் வடகொரியாவில் நிலவுகிறதாக கூறப்படுகிறது.
குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு எனவும், குடும்ப உறவுகள் முறிந்தால் சமூக கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வடகொரியாவின் அதிகாரிகள் கூறுகிறார்களாம்.. வடகொரியாவின் இந்த செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், "யாங்காங் மாகாணத்தில் 12 தம்பதிகள் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு விவகாரத்து கிடைத்த மறுநொடியே இருவரும் மிலிட்டரி லேபர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த ஆண்டு வரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் நபரைத்தான் லேபர் கேம்பிற்கு அனுப்பி வந்தனர்.
தற்போது தம்பதி இருவரையும் அனுப்பி வைக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. வடகொரியா சட்டப்படி விவகாரத்து செய்ய சாத்தியமான வாய்ப்புகளை அளிப்பதாகவும் அதற்கு தண்டனை எதுவும் கிடையாது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி இதுபோன்ற கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.