சென்னை: விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வெளியான கொள்கை பாடலை எழுதி இசையமைத்தது பற்றிய அனுபவத்தை தெருக்குரல் அறிவு விவரித்திருக்கிறார்.
இசைவாணி ஐயப்பன் பற்றிப் பாடிய பாடல் சமீபத்தில் பெரிய அளவில் சர்ச்சையானது. அதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்தப் பாடல் வெளியாகி 4 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இப்போது சிக்கலாகி இருக்கிறது. அதை இசைவாணி பாடி இருந்தாலும் எழுதியது என்னவோ தெருக்குரல் அறிவுதான்.
ஆகவே, இந்தப் பாடல் சர்ச்சையில் அவரது பொறுப்பும் கலந்துள்ளது. இந்தச் சர்ச்சை பற்றி நீலம் பண்பாட்டு அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. பெரிய அளவில் இயக்குநர் ரஞ்சித் இதற்கு எதிர்வினை செய்யவில்லை. பலரும் அமைதியாகவே டீல் செய்தனர். ஒட்டுமொத்த எதிர்ப்பும் இசைவாணி பக்கமே திரும்பி விட்டது.
அவர் இது என்ன நினைக்கிறார்? என்பது பற்றிப் பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், “யார் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நான் ஒரு மனித கெளரவத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். நமக்கு மனித உரிமை வேண்டும். ஒரு பொது நீதி தேவை.
இந்தப் பாடலை பொறுத்தவரை சமூக வலைத்தளத்தில் பெரிய அளவுக்கு விவாதமாகிறது என்றால், அதன் பின்னால் ஒரு கணக்கு இருக்கிறது. அதை யார் செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இது ஆணாதிக்க சமூகம். அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதன் வலியை வெளிப்படுத்துகிறார். அவர் கோபம்கூட கொள்ளக் கூடாது என்றால் எப்படி? எந்தக் கடவுளாக இருக்கட்டும் பெண்களுக்கு எதிராக இருந்தால், அதைச் சொல்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது?” என்று ரெட் பிக் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கப் பாடலை அறிவுதான் எழுதி இருந்தார். அந்தப் பாடல் இதுவரை யுடியூபில் 2.5 மில்லியன் வியூவ்ஸ் சென்றுள்ளது. நீலம் பண்பாட்டு இயக்கத்துடன் நெருங்கிய அரசியல் தொடர்பு கொண்ட அறிவை விஜய் தேர்வு செய்து பாட்டு எழுத வைத்தது பலர் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தது.
ஆனால் விஜய் கட்சியின் முக்கிய தலைவர்களில் அம்பேத்கரையும் அரவணைத்துக் கொண்டுள்ளதால் அறிவை அவர் பாட்டு எழுத அழைத்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஒரு அரசியல் கட்சிக்காக இவர் இதுவரை பாடல் எழுதியது இல்லை. அப்படி எனில் அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இவரே எழுதினாரா? அல்லது விஜய் தரப்பிலிருந்து தரப்பட்டதா? என்றும் ஒரு சந்தேகம் எழுந்தது.
அறிவை தேர்வு செய்த விஜய், தனது கொள்கை பற்றிய கருத்துகள் என்ன என்பதையும் அதில் என்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கிறார். அதிலிருந்த விஷயங்களைக் கோர்வையாக்கி 'வெற்றி வெற்றி வாகை வெற்றி’ பாடலை அறிவு உருவாக்கி இருக்கிறார்.
இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி அவர் பேசுகையில், “நான் அவர் பாட்டு எழுத அழைக்கிறார் என்று நினைத்துத்தான் போனேன். ஆனால் அவர் பாட்டை எழுதி இசையமைக்கவும் வாய்ப்பு கொடுத்தார். அவர் எனது பாடல் வரிகள் நன்றாக இருப்பதாகவும் சிறப்பாக எழுதுவதாகவும் சொன்னார். அவரிடம் சாதி ரீதியாக நான் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொன்னேன். என்னை விட அரசியல் அறிவு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் என்னை ஏன் இந்தப் பாடல் தேடி வருகிறது என்றால், பாட்டுடன் நான் சேர்த்து இசையையும் அறிந்து வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.