அமைச்சர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ கிளிப் ஒன்றினை தமிழக பா.ஜ.க-வினர் அண்மையில் வெளியிட்டிருந்தனர். அந்த ஆடியோ அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ `போலி' என மறுப்பு தெரிவித்து, விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான முறையில் தணிக்கை செய்யக் கோரி, இன்றைய தினம் பா.ஜ.க தலைவர்கள் குழு ஒன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, அவரிடம் கோரிக்கையை முன்வைக்கவிருக்கிறது' என்று கூறியிருந்தார்.
அதன்படி, தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, பால் கனகராஜ், சதிஷ், ஆனந்த பிரியா, நாச்சியப்பன் ஆகியோர் இன்று மாலை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்கவிருக்கின்றனர். மாலை 7 மணிக்கு ஆளுநர் ரவியைச் சந்திக்கும் பா.ஜ.க தலைவர்கள், அவரிடம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் குறித்து பேசவிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, மாலை 7:15-க்கு ஆளுநர் சந்திப்பை முடித்துக் கொண்டு ராஜ் பவனுக்கு வெளியில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கின்றனர்.
அதே போல, நாளைய தினம் தமிழ்நாடு பா.ஜ.க-வின் எஸ்.சி அணி தலைவர் தடா பெரியசாமியும் ஆளுநர் ரவியைச் சந்திக்கவிருக்கிறார். அண்மையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகநீதியை மறுப்பது முறையாகாது. சமூகநீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில்தான், பா.ஜ.க-வின் தடா பெரியசாமி நாளை இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசவிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.