மலைகிராமம் தந்த மலைப்பு.. கொடைக்கானல் தாண்டிக்குழி சேத்தாண்டியில் "சேறு அடி".. திண்டுக்கல் செம ஹேப்பி

post-img

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மலைகிராமத்தில் நடைபெற்றுவரும் கோயில் திருவிழா, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. 2 வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடப்படும் விழா என்பதால், ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இந்த கோயில் திருவிழாவின் சிறப்புக்கள் என்னென்ன?
கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் கிட்டத்தட்டட 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன.. அதேபோல உட்க‌டை கிராம‌ங்க‌ளும் உள்ளன.. இந்த மலைக்கிராம மக்களுக்கு பிரதான தொழில் விவசாயம்தான்.. அந்தவகையில், கீழ்மலை கிராம‌ பகுதியில் உள்ள முக்கிய விவசாய கிராமம்தான் தாண்டிக்குடி.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைகிராமத்தில் 2 வருடங்களுக்கு ஒருமுறை பட்டாளம்மன் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறும். இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும், சேத்தாண்டி வேடம் பூண்டும், ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வேண்டுவார்கள்.
இப்படி சேற்றை உடலில் பூசிக் கொண்டும், சேற்றை அடித்தும் வேண்டிக் கொள்வதால், தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஊருக்குள் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயத்திற்கு ஏற்றவாறு மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்கள் சேற்றினை பூசிக் கொண்டு ஆடிப்பாடி செல்வார்களாம்..
வேண்டுதல்கள்: அதேபோல, உடம்பில் சேற்றுடன் ஊருக்குள் வந்து பலவகையான கலர் பொடிகளையும் தூவி கொண்டாடி மகிழ்வார்கள்.. அப்போது சேற்றை வாரி இறைத்துக்கொண்டு, தங்களது வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட 200 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த வினோத திருவிழாவில், அனைத்து தரப்பு மக்களுமே ஆர்வத்துடன் கலந்து கொள்வது வழக்கமாகும்.

அந்தவகையில், இந்த கோவிலின் 22வது உற்சவ விழா நேற்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது.. 3 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் அம்மனுக்குப் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படவுள்ளன.. முத‌ல் நாளான நேற்று சேத்தாண்டி (சேற்றாண்டி) வேஷம் போடும் நிகழ்ச்சி நடந்தது.. இதில், தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பட்லாங்காடு, கொடலங்காடு, பண்ணைக்காடு, அரசன் கோடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சேற்றாண்டி வேடமிட்டனர்.

நம்பிக்கை: இன்றைய தினம், வயல்களத்தில் இறங்கிய பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும், சேற்றை பூசியும் சேற்றாண்டி வேடமணிந்து, தலையில் மண்களை வைத்து, அதில் செடியினை வைத்துக்கொண்டு ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வழிபட்டார்கள்.. ஊருக்குள் விவசாயம் செழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே, பக்தர்கள் அனைவரும் சேற்றினை உடலில் பூசிக்கொண்டு ஆடிப்பாடினார்கள். இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசிக்கொண்டனர்.
நாளைய தினமும், பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரண்டு வந்து இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடம்பில் சேற்றை வாரி இறைத்து, தங்கள் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றிய நிலையில், இந்த திருவிழாவின் போட்டோக்கள், வீடியோக்கள்தான், காண்போரை சிலிர்க்க வைத்து வருகிறது. பாரம்பரியமாக கொடைக்கானல் மலைக்கிராமத்தில் தாண்டிக்குடியில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தோல் நோய்கள்: இந்த திருவிழா குறித்து, கிராம கோயில் மேலாளர் இளங்கோவன் சொல்லும்போது, "சேற்றாண்டி வேடத்தில் உடல் முழுவதும் மண் பூசி கொள்வதால் தோல் நோய்கள் ,இதர பிற நோய்கள் தீரும். சீனாவில் இன்றளவும் மண் குளியல் சிகிச்சை நடைமுறையில் உள்ளது... இதை தாண்டிக்குடி மலை கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் விழாவில் ஆண்டுதோறும் கடைபிடிக்கிறோம்" என்றார்.

Related Post