கோவையை திணறடித்த ஆட்டோ டிரைவர்கள்.. பைக் டாக்சிக்கு தடைகோரி சட்டையை கழற்றி செய்த சம்பவம்.. கைது

post-img
கோவை: கோவையில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி திடீரென்று இன்று ஆட்டோ டிரைவர்கள் கோவை - அவிநாசி சாலையில் சட்டையை கழற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் போராட்டத்தை ஆட்டோ டிரைவர்கள் கைவிடாததால் அவர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பொதுமக்கள் கார், ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் பைக் டாக்சி பயன்பாடும் உள்ளது. இந்த பைக் டாக்சி சேவையால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் பைக் டாக்சி சேவையை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவையில் 200க்கும் அதிகமான ஆட்டோ டிரைவர்கள் திடீரென அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பைக் டாக்சி சேவையால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் பதாகைகள் ஏந்தி, சட்டையை கழற்றி அரைநிர்வாணமாக கோவை அவிநாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் லட்சுமி மில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலையோரம் அமர்ந்து மறியல் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர். சாலையோரத்தில் ஆட்டோ டிரைவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆட்டோ டிரைவர்கள் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், ‛‛வெள்ளை நிற போர்டில் பைக் டாக்சி ஓட்டுகிறார்கள். எங்களையும் வெள்ளை நிற போர்டில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி தந்தால் பரவாயில்லை. ஆனால் எங்களுக்கு அனுமதியில்லை. நான் காலையில் இருந்து வெறும் 90 ரூபாய்க்கு மட்டுமே ஆட்டோ ஓட்டி உள்ளேன். நான் வாழவா? இல்லை சாகவா?. எனக்கு மருந்து தந்து கொன்று விடுங்கள். குடும்பத்தோடு சாக தயாராக இருக்கிறேன்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவத்தால் இன்று மாலையில் கோவை - அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. முன்னதாக வாடகை டாக்ஸி போன்று இயக்கப்படும் பைக் டாக்ஸிக்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Post