டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்கும் நிலையில் டெல்லியில் செப்டம்பர் 17-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற வேண்டும்.
ஆனால் திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் பொது சிவில் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என அதி முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி உள்ளன. மேலும் நாட்டின் பெயரையே பாரதம் என மாற்றும் தீர்மானத்தை கூட மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் எதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது? என்கிற நிகழ்ச்சி நிரல்- அஜெண்டாவை கேட்டுக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். ஏனெனில் பணமதிப்பிழப்பு, கொரோனா பாதிப்பு, சீனா ஆக்கிரமிப்பு, மணிப்பூர் வன்முறை என எந்த ஒரு முக்கியமான விவகாரங்களிலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படாத நிலையில் இப்போது திடீரென கூட்டப்படுகிறது? என்பதும் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்து வருகிறது. மத்திய அரசோ, 5 அமர்வுகளாக மட்டுமே கூட்டத் தொடர் நடைபெறும் என்கிற பதிலுடன் நிற்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் அதாவது செப்டம்பர் 17-ந் தேதி டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா? அல்லது எதிர்ப்பை இங்கே இருந்தே தொடங்குமா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.