சென்னை: தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும். 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், தேசிய மருந்தாளுநர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாநாட்டு அறிவியல் மலரை வெளியிட்டதோடு, சிறப்பாக செயல்பட்ட மருத்துவ வல்லுநர்கள், மருந்தியல் மாணவர்களுக்கு பதக்கம், சான்று வழங்கினார்.
அதன்பிறகு மா சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக உலகின் பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்து, வெவ்வேறு மருத்துவ வல்லுநர்களை அறிவியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய மருத்துவ மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 200-க்கும் அதிக மருந்தியல் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புதிய மருந்து கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது. 200 நாடுகளுக்கும் மேல் இந்திய மருந்துகள் 100 சதவீதம் சென்றடைந்துள்ளன. அமெரிக்கா கூட 40 சதவீத ஜெனரிக் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து வாங்குகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இந்திய மருந்துகள் 30 சதவீதம் உள்ளன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழகத்தின் மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன. தமிழகத்தில் அரசு மருந்தாளுநர் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 5ம் தேதி 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் தொடங்கப்படும் என்று சுதந்திர தினத்தன்று முதல்வர் அறிவித்திருந்தார். மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து மக்கள் மருந்தக சேவையை விரைவில் தொடங்குகிறது'' என்று கூறினார்.
மக்கள் மருந்தகம் என்பது தனியார் மெடிக்கல்களை காட்டிலும் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் விற்பனை செய்யும் இடமாகும். இந்த மக்கள் மருந்தகத்தால் தமிழகத்தில் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் விரைவில் 1,000 மக்கள் மருந்தகம் அமைக்கப்பட உள்ளதாக மா சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.