பிறந்த நாள் வாழ்த்துக்கு கூட பதில் சொல்லாதவர் ராகுல் காந்தி! அரசியல் வாழ்க்கை காலி- மணிசங்கர் அய்யர்

post-img
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மணி சங்கர் அய்யர். இவர் தன் அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதுகுறித்த நேர்காணல் ஒன்றில், 'சோனியா காந்தியை 10 வருடங்களாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என் அரசியல் வாழ்க்கை உருவானதும் பிறகு ஓரங்கட்டப்பட்டது இரண்டுக்கும் காந்திகளே காரணம்." என்று கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணத்தையும் முதல் முதலாக வெளி உலகில் உடைத்துப் பேசியுள்ளார். 83 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "கடந்த பத்து வருடங்களாக சோனியா காந்தியை சந்திப்பதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ராகுல் காந்தியுடனான ஒரே ஒரு சந்திப்பும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. பிரியங்கா காந்தியை ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசியிருப்பேன். அவ்வளவுதான். எப்போதாவது செல்போன் அழைப்பில் வருவார். இதுதான் அவர்களுடன் இருக்கும் தொடர்பு. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தபோது ராகுல் காந்திக்கு ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நினைத்தேன். பிரியங்கா காந்தி என்னுடன் நன்கு பேசுவார். ராகுலுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்குமாறு அவரிடம் கூறினேன். அதற்கு அவர், 'நீங்கள் ஏன் ராகுலிடம் பேசுவதில்லை' என கேட்டார். 'நான் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் தலைவரிடம் பேச முடியாது.' என கூறினேன். இருப்பினும் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினேன். கடிதம் வந்து சேர்ந்ததா என்று கூட அவர்கள் தரப்பில் பதில் சொல்லவில்லை. என்னுடைய அரசியல் வாழ்க்கை உருவாக்கப்பட்டதும் காந்திகளால் தான். என் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்பட்டு அஸ்தமனம் ஆனதும் காந்திகளால் தான். கட்சியில் என்னுடைய எழுச்சிக்கு மட்டுமல்ல நான் ஓரங்கட்டப்பட்டதற்கும் அவர்கள் தான் காரணம். 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கடினமான காலம். அப்போது சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு 2-3 பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனால் கட்சி தலைமையில் வெற்றிடம் நிலவியது. தலைமை இல்லாததால் கட்சியிலும், ஆட்சியிலும் தடுமாற்றம் நிலவியது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை சரியாக கையாளவில்லை. காமென்வெல்த் ஊழல், அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியது காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. தலைமைக்கு கட்சியுடன், ஆட்சியையும் வழிநடத்த வேண்டிய கடமை இருந்தது. அப்போது ஒருவர் மட்டும் கடவுளின் ஆசியில் நல்ல சிந்தனைகளுடன் உற்சாகமாக இருந்தார். அவரால் கட்சியையோ, ஆட்சியையோ அல்லது இரண்டையும் நிர்வகிக்க கூடிய ஆற்றல் இருந்தது. அவர்தான் பிரணாப் முகர்ஜி. 2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு. 2014 தேர்தல் தோல்விக்கு அதுதான் காரணமாக அமைந்தது. பிரணாப் முகர்ஜி அரசியல் அனுபவம் நிறைந்தவர். அவருக்கு பிரதமர் பதவி கொடுத்திருந்தால் அது சரியான தேர்வாக அமைந்திருக்கும். மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த முடிவை எடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது. அதை செய்யத் தவறியதால்தான் தோல்வி ஏற்பட்டது. நல்ல தலைமை இருந்திருந்தால் 1984 தேர்தலில் 414 தொகுதிகளை கைப்பற்றிய கட்சிக்கு 2014 தேர்தலில் 44 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற வேண்டிய நிலை வந்திருக்காது." என்றார்.

Related Post