நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், இந்த காட்சியை காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இன்று மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பூமியின் துணைக் கோளான நிலவை இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை அனுப்பி இந்தியா ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியா கண்டுபிடித்தது. இந்நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விண்கலம் கடந்த 40 நாட்கள் பயணித்து நிலவை நெருங்கிவருகிறது. முதலில் புவி வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான்-3 விக்ரம் லேண்டர். தற்போது நிலவின் வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
நாளை மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கப்பட உள்ளது. கடைசி 15 நிமிடங்களில் நடந்த சில தொழில்நுட்ப சிக்கலால் சந்திரயான்-2 தோல்வி அடைந்தது. ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்புகள் இருக்கக்கூடாது என்பதற்காக நொடிக்கு நொடி எச்சரிக்கையுடன் கண்காணிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவியுடன் தற்போது அனுப்பி வைக்கப்பட்ட 'லேண்டர்' கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ரேடியோ அலைவரிசையில் இரண்டும் இயங்குவதால் எளிதாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. இது இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மிக சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
லேண்டரும் ஆர்பிட்டரும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதால், 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இறுதி கட்ட நிகழ்வுகளுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று நிலவின் மேலே 70 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் எடுத்த துல்லியமான நிலவின் தரைப்பகுதி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. கடைசி கட்டத்தில் லேண்டரின் செயல்பாடு இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டால் நிலவில் தரையிறங்கும் திட்டத்தை வருகிற 27ம் தேததிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
நிலவில் கடைசி நேரத்தில் எப்படி விக்ரம் லேண்டர் தரையிறங்கும்: கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு விக்ரம் லேண்டர் கருவி நிலவுக்கு மேலே குறைந்த பட்சம் 30 கி.மீ. தொலைவிலும், அதிகமாக 100 கி.மீ. தூரத்திலும் சுற்றி வரும் வகையில் செயல்முறை செய்யப்பட உள்ளது. விக்ரம் லேண்டர் கருவியின் அடியில் உள்ள 4 கால்களும் கீழ்நோக்கி இருக்காது பக்கவாட்டில் இருக்கும்படி செய்யப்பட உள்ளது. நிலவின் தென்துருவத்தில் இறக்கும் போது ராக்கெட் தொழில் நுட்பத்தை செயல்படுத்தி விக்ரம் லேண்டரை தரையிறக்க முடிவு செய்துள்ளார்கள். முதலில் பூமிக்கு வெளியே சந்திரயான்-3-ஐ ராக்கெட் கொண்டு சென்றதோ, அதேபோல், நிறைவாக லேண்டர் கருவியை நிலவில் தரையிறங்கச் செய்யும்போதும் அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
நிலவுக்கு 800 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் கருவி வரும்போது சைக்கிளில் பிரேக் பிடித்தால் எப்படி வேகம் குறையுமோ அதுபோல் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் என்ஜினை முன்புறமாக இயக்கி, லேண்டர் கருவியின் வேகத்தை குறைப்பார்கள். இறுதியாக 150 மீட்டர் உயரத்துக்கு கொண்டுவரப்படும். அதன்பிறகு 22 நொடிகள் அந்தரத்தில் அப்படியே விக்ரம் லேண்டர் மிதக்கும்.
இந்த நேரத்தில், உடனடியாக லேண்டர் கருவியில் ஆபத்தை தவிர்க்கும் கேமராக்கள் செயல்படத் தொடங்கிவிடும். விக்ரம் லேண்டர் கருவி தரையிறங்கும் போது, அதன் 4 கால்களில் ஒன்று பாறை மேல் படக்கூடாது அதேபோல் பாறைக்குழிக்குள் சிக்கிவிடவும் கூடாது. எங்கு இறங்கலாம் என்பது குறித்து சரியான இடத்தை தேர்வு செய்வதற்குத்தான் அந்த 22 நொடிகள் அப்படியே லேண்டர் மிதக்கும்.
நிலவின் தென்துருவத்தில் இறுதியான சமதளத்தை துல்லியாக தேர்வு செய்து அந்த இடத்தை நோக்கி லேண்டர் கருவி மெதுவாக கீழ் இறங்கும்ட. அப்போது லேண்டரின் கேமராக்கள் நிலவின் தரைப்பகுதியை துல்லியமாக படம் பிடித்து அனுப்பி வைக்கும். இறுதியாக பறவையின் இறகை போல் மெதுவாக லேண்டர் விரித்தபடி தரையிறங்க உள்ளது. இதற்காக 'லேசர் டாப்லர் வெலாசி மீட்டர்' என்ற கருவியை இஸ்ரோ விஞ்ஞானிகள் பொருத்தி இருக்கிறார்கள்.
நிலவில் இந்த கருவி நிலவின் தரையை நோக்கி ஒரு லேசர் ஒளிக் கற்றையை அனுப்பும். அதை வைத்தே லேண்டர் கருவி செயற்கை நுண்ணறிவுடன் செயல்பட்டு தரையிறங்க முயற்சி செய்யும். இதனிடையே கடைசி கட்டமாக லேண்டர் கருவியின் அடியில் உள்ள கேமரா நிலவின் தரைப்பகுதிக்கு 10 மீட்டர் தூரம் என்கிற நிலையை எட்டும் போது, லேண்டரில் உள்ள சிறிய ராக்கெட்டுகளின் செயல்பாடு நிறுத்தப்படும்.
அதன்பிறகு, 10 மீட்டர் தூர இடைவெளியில் லேண்டர் கருவி, நிலவின் தரையில் விழ வைக்கப்படும். கடைசி 10 மீட்டர் லேண்டரை கீழே இயக்கி இறக்கினால் மண் துகள் புழுதிபோல் மேலெழும்பும் என்பதால் அது லேண்டரில் படியும். அப்படி படிந்தால் சூரியனில் இருந்து வெப்பத்தை பெற்று, மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை விக்ரம் லேண்டருக்கு ஏற்படும். அதற்காகவே அப்படி செய்கிறார்கள்.