புஷ்பா 2.. படமா அது.! மக்கள் பா. ரஞ்சித் படங்களை பார்க்க வேண்டும்! பாராட்டிய தெலுங்கானா போலீஸ்

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த விவகாரம் இப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பேசிய ஹைதராபாத் போலீஸ் உதவி ஆணையர் விஷ்ணு மூர்த்தி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அல்லு அர்ஜுனை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், அதேநேரம் பா. ரஞ்சித் படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்று பாராட்டினார். அல்லு அர்ஜுன் நடிப்பில் இம்மாத தொடக்கத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அன்றிரவு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால் அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புஷ்பா 2 சர்ச்சை: இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து தெலுங்கானா போலீசார் கைதும் செய்தனர். இருப்பினும், தெலுங்கானா ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதால் அவர் ஒரு நாள் மட்டுமே சிறையில் இருந்தார். கடந்த சனிக்கிழமை சந்தியா தியேட்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமும் அளித்தார். ஹைதராபாத் உதவி ஆணையர் விஷ்ணு மூர்த்தி: இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் உதவி ஆணையர் விஷ்ணு மூர்த்தி சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார். ரிமாண்ட் செய்யப்பட்ட ஒருவர், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர் எப்படி வழக்கு குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், போலீசார் சொன்னதை அல்லு அர்ஜுன் கேட்காததே சந்தியா தியேட்டர் உயிரிழப்புக்குக் காரணம் என்று சாடினார். மேலும், அவர் புஷ்பா 2 போன்ற படத்தைப் பார்த்து பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக பா. ரஞ்சித் போல மக்கள் பிரச்சினைகளைப் பேசுவோர் படத்தைப் பார்க்குமாறும் குறிப்பிட்டார். பா. ரஞ்சித் படங்களைப் பாருங்கள்: அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், "மிடில் கிளாஸ் மக்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்றால்.. எந்தவொரு படமாக இருந்தாலும் ஒரு 10, 20 நாட்கள் காத்திருந்தால் போதும் ஓடிடி தளங்களில் வந்துவிடும். அதை விட்டுவிட்டு படம் பார்க்கிறேன் எனச் சொல்லி, உழைத்துச் சம்பாதித்த பணத்தையும், உங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம். ஹீரோ வழிபாடு படங்களுக்கு அதிகளவில் டிக்கெட் கொடுத்துப் பார்ப்பதற்குப் பதிலாக மக்கள் பிரச்சினைகளைப் படமாக எடுக்கும் பா. ரஞ்சித் உள்ளிட்டோரின் படங்களைப் பார்க்குமாறு மிடில் கிளாஸ் மக்களிடையே கேட்டுக்கொள்கிறேன். பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் எடுக்கும் படங்களுக்கு ரூ. 2000 இல்லை ரூ. 4000 கொடுத்துக் கூட பார்க்கலாம்" என்றார். புஷ்பா 2 மீது கடும் விமர்சனம்: தொடர்ந்து அல்லு அர்ஜுன் குறித்துப் பேசிய அவர், "ஓவராக பறக்க நினைக்காதீர்கள்.. மக்கள் உங்கள் சிறகுகளை வெட்டிவிடுவார்கள். இவர்கள் படத்தைப் பாருங்கள்.. எப்படி கொள்ளை அடித்துவிட்டு, தப்பியோடலாம் என்பதை காட்ட ஒரு படமா.. புஷ்பா 2 படத்தில் கூட போலீசாரை மிக மோசமாகச் சித்தரித்துள்ளனர். இதன் மூலம் அல்லு அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்.. போலீசாரை இழிவுபடுத்த முயல்கிறாரா இல்லை கடத்தல்காரர்கள் உயர்ந்தவர்களாகக் காட்ட விரும்புகிறாரா" என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

Related Post