என்னய்யா ஜோக் காட்றீங்களா.. 200 தொகுதிகளில் வெற்றி.. திமுகவுக்கு செல்லூர் ராஜூ விட்ட சவால்

post-img

மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியதை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக சொல்லியிருப்பது இந்தாண்டின் சிறந்த ஜோக் என்று விமர்சித்திருப்பதுடன் திமுகவுக்கு ஒரு பகிரங்க சவாலும் விட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை. போட்டோ சூட் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு முழுமையாக செயலிழந்துவிட்டது. நிவாரணப் பொருள்கள் கூட தரமாக வழங்கப்படவில்லை. அமைச்சர் மீது மக்களே சேற்றை வாரி இரைக்கும் அளவுக்கு அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.

இது சாதாரண மழை வெள்ளம் தான். இதைவிட பல மடங்கு பெரிய புயல், மழை, வெள்ளத்தை எல்லாம் அதிமுக அரசு சமாளித்தது. அப்போது நாங்கள் களத்தில் பணியாற்றியபோது மக்கள் எங்களை வரவேற்றனர். மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்தோம். இவர்கள் கண் துடைப்புக்காக மட்டுமே பணியாற்றுகிறார்கள். இதைப் பார்க்கும்போது மனம் வேதனையாக உள்ளது. உண்மையிலுமே இந்த அரசு அப்புறப்படுத்த வேண்டியது.
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் சொல்வது இந்தாண்டின் மிகச்சிறந்த ஜோக். மக்களின் மனநிலையே இவர்களுக்கு தெரியவில்லை. தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயாரா. அதிமுக 2014, 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு வென்றது. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட பெரும்பாலான துறைகளில் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது.
இந்த அரசுக்கு கருணையே இல்லை. இவர்களின் வாக்குகளை வாங்கித்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தங்களின் அந்த குடும்பமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. சினிமாத்துறையில் இருந்து வந்த உதயநிதி யாரையோ தாக்குவதற்காக சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று வேடிக்கையாக சொல்கிறார். அவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் கூட வெளியாவதில்லை. மக்களுக்கு எதுவுமே தெரியாது என நினைக்கிறார்கள்.

மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார். இந்த ஆட்சியில் எல்லா திட்டங்களும் தோல்வியடைந்துள்ளது. வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள். இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
மன்னர் ஆட்சியை ஒழித்துவிட்டோம். இருப்பினும் தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பத்தின் ஆட்சியை ஒழிக்கவில்லை. தமிழ்நாட்டின் மொத்த அதிகார மையமாக ஒரு குடும்பம் தான் உள்ளது. சனாதனம் பேசுபவர்கள் குடும்ப அரசியலை பேசுவதில்லை. அவர்களின் வீட்டிலேயே பூஜை செய்கிறார்கள். இவர்கள் எப்படி சனாதானம் பேசுகிறார்கள்.
காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் ஏற்றிவிட்டனர். கூட்டணி கட்சி நெருக்கடியால் விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று விஜய் கூறியது 100 சதவீதம் உண்மை. ஆட்சியாளர்களின் நெருக்கடியால் தான் அவர் விலகியிருப்பார் என நினைக்கிறேன்.” என்றார்.

Related Post