முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு திருமணம்.. சமந்தா போட்ட அந்த ஒரு போஸ்ட்.! குழப்பத்தில் நெட்டிசன்கள்

post-img

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இடையே நேற்றைய தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டு இருந்தார். அதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கல்யாணம் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் நேற்று சிறப்பாக நடந்தது. இதில் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.
நாகார்ஜுனா: நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமண போட்டோக்களை நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும், தனது மருமகளை குடும்பத்தில் வரவேற்றும் ட்வீட் செய்து இருந்தார். அதில் அவர், "சோபிதாவும் சைதன்யா அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதைப் பார்க்கும் போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. அன்புள்ள சோபிதா.. ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டாய்" என்று பதிவிட்டு இருந்தார். அவரது ட்வீட் இணையத்தில் டிரெண்டானது.
சமந்தா: இதற்கிடையே இருவருக்கும் திருமணம் நடந்த நேற்றைய தினம் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் செய்துள்ளார். எதையோ மறைமுகமாகச் சொல்வது போல அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான வயோலா டேவிஸ் என்பவர் முதலில் இந்த வீடியோவை ஸ்டோரியாக போட்டு இருந்தார். அதை சமந்தா தனது ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் சிறுவனுக்கும் சிறுமி ஒருவருக்கும் இடையே மல்யுத்தப் போட்டி நடைபெறுவது போல இருக்கிறது. சிறுமிக்கு எதிராகக் களமிறங்கிய இந்த சிறுவன் முதலில் அதீத நம்பிக்கையில் களத்தில் நுழைகிறான். ஆனால், போட்டியின் இறுதியில் அந்த சிறுவனைச் சிறுமி வீழ்த்துகிறார். அந்த வீடியோவை பதிவிட்ட வயோலா டேவிஸ், "ஒரு பூவைப் போல உதிரக்கூடியவள் இல்லை.. மாறாக வெடிகுண்டு போலச் சிதறக்கூடியவள்" என்று பதிவிட்டு அத்துடன் FightLikeAGirl என்ற ஹேஷ்டேக்கையும் போட்டு இருந்தார்.
குழம்பிய நெட்டிசன்கள்: இந்த ஸ்டோரியை நடிகை சமந்தாவும் ரீட்வீட் செய்து இருக்கிறார். FightLikeAGirl என்ற ஹேஷ்டேக்கை போட்டு இந்த வீடியோவை அவர் தனது ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நடைபெற்ற நாளில், சரியாக சமந்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான யே மாயா சேசவே என்ற படத்தில் நடிக்கும் போதுதான் நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.. இந்த தம்பதி 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவரும் 2021ம் ஆண்டு அக். மாதம் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Post