"வெறும் 500 ரூபாய் நோட்டு.." நாடாளுமன்றத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக புகார்.. காங். எம்.பி விளக்கம்

post-img

டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி சிங்வி முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த நவ.25ம் தேதி தொடங்கிய இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிச.20ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதானி லஞ்ச புகார் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்தனர். இதனால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது.
பணம் பறிமுதல்: இந்தச் சூழலில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வியின் சீட்டிற்கு கீழ் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை ராஜ்யசபாவில் தெரிவித்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி விளக்கமளித்துள்ளார். தான் எப்போதும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் செல்வேன் எனக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் அது தன்னுடைய பணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சிங்வி எம்பி விளக்கம்: டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதற்கு முன்புவரை இதுபோல ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.. நான் எப்போதும் ராஜ்யசபாவுக்கு செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் செல்வேன். ராஜ்யசபாவில் பணம் எல்லாம் இப்போது தான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன்.
நான் மதியம் 12:57 மணியளவில் நாடாளுமன்றம் சென்றேன். இருப்பினும், நான் சென்றவுடன் மதியம் 1 மணிக்கு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டார்கள். இதனால் மதியம் 1:30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். பின்னர் நான் நாடாளுமன்றத்தில் இருந்து திரும்பி வந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
உத்தரவு: ராஜ்யசபாவில் கரன்சி நோட்டுகள் சிக்கியதாகத் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் கூறி, இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டு இருந்தார். காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் கரன்சி நோட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டதாகக் கூறப்பட்டது.. அது தொடர்பாகவே விசாரணைக்கு ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஜக்தீப் தன்கர் கூறுகையில், "நேற்று சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அறையில் வழக்கமான சோதனை நடைபெற்றது. அப்போது தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ள அபிஷேக் சிங்விக்கு தற்போது ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222இல் இருந்து ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது என்பதை நான் இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Post