திரையுலக 'சாமி' இளையராஜாவுக்கு சங்கராச்சாரி முதல் கோவில் கருவறை வரை அவமானம் தந்த ஆன்மீக உலகு!

post-img
சென்னை: 'தமிழ்நாட்டு மக்கள்' இசைஞானி என கொண்டாடுகிற மாபெரும் இசைக்கலைஞ'ர்' இளையராஜா இப்போது 'மீண்டும்' அவமதிக்கப்பட்டுள்ளார். திரை உலகில் 'சாமீ' என என்னதான் அழைக்கப்பட்டாலும் நிஜ உலகில் 'சாமி' விவகாரங்களில் எப்போதும் இளையராஜாவுக்கு ஏகப்பட்ட அவமரியாதைகள்! இத்தனை அவமானங்கள், அவமரியாதைகளை ஒவ்வொரு முறையும் இளையராஜா சகித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் 'ஜனனி அகம் நீ' என அதே சாமி 'சங்கதி'களில் சரணாகதி அடைகிற போதுதான் அவரைக் கொண்டாடித் தீர்க்கும் சாமானிய ஜனங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இசைத்துறை என்பது 'இன்னாருக்கு இன்னாரென்று விதிக்கப்பட்ட' ஒன்றாக திணிக்கப்பட்ட காலத்தில் வயக்காட்டு வேலைகளில் அப்பச்சிகளும் அம்மாச்சிகளும் தாத்திகளும் தாத்தன்களும் பாடிய பாடல்களை வைத்து வித்தை காட்டி விண்ணைத் தொட்ட இசை விஞ்ஞானி இளையராஜா என்பது மிகையல்ல. அதுவும் திரை இசைத்துறையில் அதி உச்சம் தொட்ட நிலையில் இளையராஜா 'சாமீ' என இப்போது உச்ச நட்சத்திரங்களால் உச்சிமோர்ந்து கொண்டாடப்படுகிறார். ஆனால் 'இசைத்துறை'க்கு 'அவனால்' பிறப்பிக்கப்பட்ட சபா சங்கீத சுப்புடு வித்துவான்கள், 16 வயதிலே சப்பாணி காலம் முதலே இளையராஜாவை சபித்தும் கரித்தும் கொட்டியும் வந்தார்கள். ஆழிப் பேரலை போல பெருவெள்ளமாய் பிரவாகமெடுத்து ஓடிய இசைப் பெருஞானி இளையராஜாவின் வேகத்தை திரைத்துறையில் தடுத்து விரட்டியடிக்க எத்தனை எத்தனை சதிராட்டங்களை 'சதிராளிகள்' அரங்கேற்றினார்கள்! இத்தனையையும் தாங்கிக் கொண்ட இந்த இளையராஜா எனும் பெருமனிதர் இடைவிடாமல் ஆன்மீக சேவைகளை அரங்கேற்றிக் கொண்டே வந்தார். அதில் ஒரு துயரம் என்னவெனில் இளையராஜாவின் கண்களில் ஆன்மீகமாக தெரிந்தது, மூகாம்பிகையும் ரமண மகிரிஷியும் ஆதி சங்கரருமாகிய 'உயர்ஜாதி' ஆண்டவாக்கள் மட்டும்! இசைஞானி எனும் இளையராஜை உச்சாணிக்கு கொண்டு சேர்த்த கிராமத்துக்கு குப்பாயியும் சுப்பம்மாளும் அக்கம்மாளும் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டாடிய மாடனும் காடனும் கருப்பனுமாகிய சாமிகள் ஏதோ இந்த 'ராசாவின் மனசுலே' இல்லாமாலேயே போய்விட்டது எவ்வளவு பெரிய துரோகமும் துயரமும் தெரியுமா? நமக்கு வலிக்கிறது.. ஆனால் 'நம்மவரு'க்குதான் வலிக்காமல் போனது! ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் தொடங்கி எத்தனை எத்தனையோ ஆன்மீகத் திருப்பணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த 'கறுப்பு' இசைஞானி இளையராஜாவுக்கு 'வெள்ளைத்தோல்' வகையறாக்கள் இடைவிடாமல் அவமானங்களைத்தான் கொட்டி கொட்டிக் கொடுக்கின்றனர் இன்றைய ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வரை.. ரமண மகிரிஷிதான் உயிர்த்தெழுந்தவர்; யேசுபிரான் அல்ல என்று ஏகடியம் பேசிவிட்டதாலேயே இளையராஜாவுக்கு 'அந்த' ஆன்மீக உலகு மகுடம் சூட்டி மரியாதை செய்துவிடவில்லை என்பதை நாம் மறக்கவில்லை.. ஆனால் பண்ணைப்புரத்து மக்கள் பாவலர் வரதராசனின் தம்பிதான் மறந்து போனார்.. நமக்குதான் வலிக்கிறதே- அவருக்கு இல்லையே 'சாமீ'! தாம் கொண்டாடிய இந்து மதத்தின் 'உயர்'தலைவர் சங்கர மடத்தில் 'பஞ்சம' இளையராஜாவுக்கு 'கையால்' விருதுதரப்படாமல் உதவியாளர் கையில் 'சங்கராச்சாரியார்' விருது கொடுத்த போது கொந்தளித்தது என்னவோ கறுப்பு தமிழர்கள்தான்.. ஆனாலும் அய்யா இளையராஜா, விதியே.. விதியே என ஆற்றாமையை இயல்பாக்கிக் கொண்டு ஏற்றுக் கொண்டவராயினார். ஆமாம் நமக்குதான் வலிக்கிறது.. நம்ம 'சாமீ' இளையராஜாவோ பட்டும் திருந்தாதவராகவே இருக்கிறாரே! சாமானியர்களின் கொண்டாட்டத்தில்தான் 'சாமியானார்' இளையராஜா.. சாமானியர்களை மனிதப் பிறவிகளாக கூட மதிக்காத 'மட'ங்களின் மடாதிபதிகளால் இரக்கமே இல்லாதவராக இளையராஜா நடத்தப்படுகிறர் போது சாமானியர்களே புழுக்களால் துடிக்கின்றனர் என்பதை 'சாமீ' உணரும் தருணம்தான் ஆன்மீக உலகு ஆண்டாள் கோவிலில் தந்த அவமரியாதை- என்ன செய்வார் இளையராஜா?

Related Post