கிம் ஜாங்குடன் கைகோர்த்த இந்தியா.. வடகொரியாவை வைத்து இந்தியா மெகா பிளான்.. ஏன் முக்கியம்?

post-img
டெல்லி: அனைத்து நாடுகளும் தற்போது உக்ரைன் மீதான ரஷ்யா போர் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மீது கவனம் செலுத்தி வரும் நிலையில் சைலன்ட்டாக பிரதமர் மோடி வடகொரியாவுடன் உறவை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக வடகொரியாவில் மூடப்பட்ட இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்துள்ளார். அதோடு திடீரென்று வடகொரியாவுடனான உறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா.. மர்மதேசமாக அழைக்கப்படும் இந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவரை ஏன் சர்வாதிகாரி என கூறுகிறோம் என்றால் அந்த நாட்டின் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. செல்போன், டிவி சேனல்கள் பார்ப்பதில் கட்டுப்பாடு உள்ளது. ஹேர் ஸ்டைல் வைப்பது, உடை அணிவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. மிகவும் சிறிய நாடான வடகொரியாவின் மக்கள் தொகை என்பது 2 கோடியே 60 லட்சம் தான். சிறிய நாடாக இருந்தாலும் கூட அந்த நாடு தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அடிக்கடி அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்காவை அலறவிட்டு வருகிறார் கிம் ஜாங் உன். தற்போதைய சூழலில் அந்த நாடு நட்பாக இருக்கிறது என்றால் ரஷ்யாவுடன் தான். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ஆயுத உதவிகள் மற்றும் படை வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது. அதேபோல் நம் நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான உறவு என்று எடுத்து கொண்டால் பெரிதாக சொல்லும் படியாக இன்று வரை இல்லை. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் வணிகம், ஆயுத பரிமாற்றம் உள்பட எந்த துறையிலும் இருநாடுகள் இடையே பெரிய அளவில் எந்த தொடர்பும் இல்லாத நிலை தான் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது வடகொரியாவுக்கும், நமக்குமான உறவை பலப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த உலகமும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிரச்சனைகளில் நம் நாட்டுக்கும் கவனம் இருந்தாலும் கூட சைலன்ட்டாக மத்திய அரசு தென்கிழக்கு ஆசியா மற்றும் கொரிய தீபகற்பத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் நம் நாட்டின் தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அங்கு இருந்த இந்திய தூதரகம் கடந்த 2021ம் ஆண்டு ஜுலை மாதம் மூடப்பட்டது. அங்கிருந்த தூதர் மற்றும் ஊழியர்கள் ரஷ்யா வழியாக டெல்லி வரவழைக்கப்பட்டனர். இந்தியாவுக்கான வடகொரியா தூதராக செயல்பட்ட அதுல் மல்ஹாரி கோட்சர்வ் மீண்டும் மங்கோலியாவுக்கான தூதராக 2022ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது வடகொரியா உடனான உறவை பலப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு அந்த நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் மூடப்பட்ட இந்திய தூதரகத்தை திறப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி டெக்னிக்கல் ஸ்டாப் மற்றும் தூதரக அதிகாரிகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது சமீபகாலமாக வடகொரியா மீது உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதோடு அந்த நாட்டுடனான தூதரக உறவை பல நாடுகள் விரும்புகின்றன. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் வடகொரியாவிடம் இருக்கும் ஆயுத பலம் தான். வடகொரியாவிடம் சக்திவாய்ந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை, ஏவுகணை சார்ந்த புதிய தொழில்நுட்ப்ம், அணுஆயுதங்கள் உள்ளிட்டவை உள்ளன. தன்னிடம் நட்பு பாராட்டும் நாடுகளுக்கு இந்த ஆயுத உதவிகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருகிறது. தற்போதைய சூழலில் நம் நாட்டுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுத உதவிகள் தேவையில்லை என்றாலும் கூட அந்த நாட்டின் ஆயுதங்கள் நம்மிடம் மோதலை கடைப்பிடித்து வரும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கிடைத்துவிடக்கூடாது. இதற்கு நம் நாடு வடகொரியாவுடன் ரஷ்யா போல் நட்பாக செல்ல வேண்டும். அதேபோல் தற்போது நமக்கு பாதுகாப்பு துறையில் உற்ற தோழனாக ரஷ்யா இருக்கிறது. இந்த நட்பு என்பது வடகொரியாவிடமும் நமக்கு மதிப்பை கொடுக்கும். இதன்மூலம் நம் நாட்டை எதிர்க்கும் எதிரிகளுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக வடகொரியாவுடன் நம் அண்டை நாடான சீனா மற்றும் ஈரான் நட்புடன் உள்ளன. ஆசியாவை பொறுத்தவரை குவாட் அமைப்புக்கு (அமரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா கூட்டமைப்பு) அடுத்தப்படியாக பெரிய கூட்டணி என்றால் அது வடகொரியா, ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்டவை சேர்ந்து இருப்பது. இதனால் நம் நாட்டை பொறுத்தவரை வடகொரியாவுடன் தூதரக முறையில் நல்ல உறவு வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் இந்திய தூதரகத்தை மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திறந்து அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post