காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.. உத்தரபிரதேச போலீசார் அதிரடி

post-img
லக்னோ: பஞ்சாபில் போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர், உத்தர பிரதேசத்தில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரிடமும் இருந்து ஏகே 47 ரைபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் இன்று அதிகாலையில் நடைபெற்ற என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுண்டரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சுடுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் தெரியவந்துள்ளது. குர்வீந்தர் சிங் ( வயது 25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), ஜஸ்பிரித் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆகிய மூன்று பேரும்தான் போலீசாருடனான துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த மூன்று பேரும் தடை செய்யப்பட்ட இயக்கமான காலிஸ்தான் கமோண்டா ஃபோர்ஸ் என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாபின் குருதாஸ்பூரில் காவல் நிலையங்கள் மீது கையறி குண்டு வீசியதில் இந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரிடமும் இருந்து ஏகே 47 ரைபிள்ஸ், இரண்டு பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக பிலிபட் மாவட்டத்தில் உள்ள புரன்புர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்குள், மேற்கூறிய மூன்று பேரின் நடமாட்டமும் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், காவல்துறையினரை நோக்கி தாக்கியுள்ளனர். இதையடுத்து உஷாரான போலீசார், பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேரும் கொல்லப்பட்டு இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் கூறினர். இந்த எண்கவுண்டர் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் உயரதிகாரிகள் கூறினர். முன்னதாக கடந்த 21 ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் உள்ள கலனாவூர் சப் டிவிஷனுக்குட்பட்ட காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் மூன்று பேரும் உத்தர பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Post