கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.செட்டி பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை செய்துவிட்டு தாங்கள் தங்கியுள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர், தேன்கனிக்கோட்டை-ஓசூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் மீது கார் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் 2 பெண் ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெடுஞ்சாலைகள் பொதுவாக நடந்து செல்வோருக்கு சாலைகள் இப்போது ஏற்றதாக இல்லை. ஏன் இருசக்கரவாகனத்தில் செல்வோருக்கே ஏற்றதாக இல்லை.. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பெரிய வாகனங்களே சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நடந்து செல்வோருக்கான பாதைகளில் தான் இருசக்கர வாகனங்கள் செல்லும் நிலை இருக்கிறது. ஆனால் சாலைகளில் இருக்கும் பெரிய பள்ளங்கள் மற்றும் மணல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் தள்ளிவிடுகின்றன. தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் விபத்தில் சிக்க பெரிய பள்ளங்களும், சாலையோரங்களில் தேங்கும் மணல்களும் முக்கிய காரணமாக உள்ளன. சரி விஷயத்திற்கு வருவோம்..
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பி.செட்டி பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ யாதவ் (வயது 23), சந்தா (20), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்மிதா குமாரி (24), மாதுரி (24), கரன் சித்தார் (26) உள்ளிட்டோர் வேலை செய்து வருகிறார்கள். தொழிற்சாலையில் பணி முடித்துக் கொண்டு நேற்று மாலை 5 மணி அளவில் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக தேன்கனிக்கோட்டை-ஓசூர் செல்லும் சாலையில் இவர்கள் ஐந்து பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற சிவப்பு நிற கார் ஒன்று எதிர்பாரதவிதமாக அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயஸ்ரீ யாதவ் மற்றும் சந்தா ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மாதுரி, அஸ்மிதா குமாரி, கரன் சித்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சிவப்பு நிற கார் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலமங்கலம் அருகே கார் மோதி தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் 2 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.