பிஎஃப் ஓய்வூதியம்.. ரூ.9000 உயர்த்த கோரி பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் போராட்டம்.. சென்னையில் பரபர

post-img
சென்னை: மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்க போவதாகவும், இதற்கான உரிய பதில் எங்களுக்கு கிடைக்கும்வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் "பி.எப் 3.0" என்ற திட்டத்தின் மூலமாக கூடுதல் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, ஏடிஎம் மூலமாக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தினை எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது... அதுவும் வரப்போகும் புத்தாண்டிலிருந்து இந்த புதிய வசதி அமலாக போகிறது. ஏற்கனவே இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில்கூட ஏடிஎம் இயந்திரம் மூலம் இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுப்பதை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா உறுதி செய்திருக்கிறார்.. தொடர்ந்து இந்த நடைமுறையில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவசர காலங்களில் யாரையுமே எதிர்பார்க்காமல் பிஃஎப் பணத்தை, பயனாளர்களே எளிமையாக எடுத்து கொள்ள முடியும். இதுஒருபுறமிருந்தாலும், பிஎஃப் திட்டத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியவாறே உள்ளனர்.. தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ராயப்பேட்டை இபிஎப் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், சென்னை இபிஎப் பென்சன் சங்கம், அகில இந்திய இபிஎப் பென்சன் அசோசியேசன், தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை இபிஎப் பென்சன் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கே.பி.பாபு தலைமை வகித்தார்... செய்தியாளர்களிடம் கே.பி.பாபு சொல்லும்போது, "வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாடு முழுவதும் 80 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 லட்சம் பேர் ரூ.1000-க்கும் குறைவான ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறார்கள்.. ரூ.4 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் கிடையாது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தில், பாதி சம்பளம் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்தை எங்களுக்கு உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கக்கோரி, 10 வருட காலம் போராடியிருக்கிறோம். இதுகுறித்து, டெல்லி பார்லிமென்ட்டில் 60 எம்பிக்களும் வலியுறுத்தி பேசினார்கள். ஆனாலும், எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை. அதேபோல, கூடுதலாக பணம் கட்டினால் கூடுதலாக உயர் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி செலுத்தப்படும் ரூ.6,500 சீலிங் கட்டணத்தை தாண்டி கூடுதலாக பணம் கட்டினால் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். இதற்காக தேசம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தும்கூட, வெறும் 16 ஆயிரம் பேருக்கு மட்டுமே உயர் ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும்கூட, இதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 1200 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. 2014க்கு பிறகு பணி ஓய்வு பெற்றவர்கள் கூடுதலாக பணம் கட்டினால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ரப்பளித்தும்கூட, இபிஎப் நிறுவனம் தொடர்ந்து அவற்றை எங்களுக்கு இன்னமும் வழங்கவில்லை. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் எங்களது கோரிக்கையில் நிறைவேற்ற மனு அளிக்க போகிறோம்.. இதற்கான உரிய பதில் எங்களுக்கு கிடைக்கும்வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

Related Post