சென்னை: நாவல் பழம் அல்லது நாகப்பழம்- இதன் மருத்துவ குணங்கள் என்னவென தெரியுமா? இந்த பழம் சீசனில் கிடைக்கும் பழமாகும்.
காஸ்ட்லி பழங்களில் மட்டும்தான் மருத்துவ குணங்கள் இருக்கிறது என நீங்கள் நம்பினால் அது தவறு. சாலையோர மரத்தில் கிடைக்கும் நாவல் பழத்திலும் அதிக நன்மைகள் இருக்கின்றன.
இந்த மரங்கள் கிராமப்புறங்களிலும் வீடுகள் தோறும் இருக்கும். இந்த நாவல் மரத்தின் காற்று உடலுக்கு அத்தனை நல்லது. இந்த பழம் பொதுவாக கோடை காலத்தில் கிடைக்கும்.
இந்த பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இது குறைந்த கலோரி கொண்டது, ஆனால் அதிக சுவையுடையது. இதில் விட்டமின் சி இருக்கிறது. தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், போலிக் ஆசிட் ஆகியவை உள்ளன. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ் இருக்கிறது. மேலும் ஆன்டி பாக்டீரியல் குணமும் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழம். இதை உண்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். அஜீரண மண்டலத்தை சீர்படுத்தும். தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். விட்டமின் சி இருப்பதால் முகத்தில் பருக்கள் வராது, வயதான தோற்றத்தை ஏற்படுத்தாது. விட்டமின் சி ரத்தத்தை சுத்தப்படுத்தும். முகத்தை பொலிவாக வைத்திருக்கும்.
நாவல் பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இந்த பழத்தில் பாலிபீனோலிக் இருப்பதால் நீரிழிவு சிகிச்சையில் முக்கிய கடமையாற்றுகிறது. இதய நோய் வராமல் தடுக்கும். ஜாமுன் பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இதயத்தை காக்கும். உடல் எடை குறைப்புக்கும் இது உகந்தது. இதில் கலோரி குறைந்த அளவு இருக்கிறது. உடலில் நீர் சத்து வெளியேறுவதிலிருந்து தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஸ்டாமினாவை வலுப்படுத்தும். வாயில் உள்ள நோய் தொற்றுகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் தன்மை கொணடது. பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்தி தொண்டை பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். அது போல் கல்லீரல் பிரச்சினைகளையும் சிறுநீர் பிரச்சினைகளையும் வயிற்றுப்போக்கு பிரச்சினையையும் சரி செய்யும்.
இந்த பழம் குளிர்ச்சியானது என்பதால் இதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வை வாழுங்கள்.