சென்னையில் பெண் நீதிபதி வீட்டில் நுழைந்து ரகளை.. மரம் ஏறி தப்பிக்க முயன்ற போலீஸ்காரர் கம்பி குத்தி பலி

post-img
சென்னை: சென்னையில் பெண் நீதிபதி வீட்டில் நுழைந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு மரம் ஏறி தப்பிக்க முயன்ற கொழுந்தனாரான போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்து கம்பி குத்தி உயிரிழந்தார். சென்னை கேகே நகர் 2வது செக்டாரில் வசித்து வந்தவர் செல்வக்குமார் (வயது 30). இவர் செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். செல்வக்குமாரின் அண்ணன் பெயர் பெருமாள். இவரும் கேகே நகர் 2வது செக்டாரில் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். இதில் தனலட்சுமி நீதிபதியாக உள்ளார். அவர் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் செல்வக்குமாருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவில் குடிபோதையில் இருந்த செல்வக்குமார், அண்ணன் பெருமாள் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டார். வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அவர் உடைத்துள்ளார். இதனை தடுக்க முயன்ற அண்ணன் பெருமாள் மற்றும் அண்ணியும், நீதிபதியுமான தனலட்சுமியை அவர் தனி அறையில் பூட்டி வைத்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வக்குமாரை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது செல்வக்குமார் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள வாசல் வழியாக வெளியேறினார். அதோடு போலீசிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் மரத்தின் மீது ஏறி வெளியேற முயன்றார். அப்போது கால் தவறியது. இதனால் மரத்தில் இருந்து கீழே விழுந்த செல்வக்குமாரின் இடுப்பில் கம்பி பாய்ந்தது. உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு கேகேநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் செல்வக்குமார் இறந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post