அனல்மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள் - சீமான்

post-img
சென்னை: வடசென்னையில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களை விரிவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று காட்டமாக தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். சென்னையின் அடையாளமாக, இன்னமும் பழமை மாறாமல் இருப்பது வடசென்னைதான். இங்கு நெருக்கமாக மிக குறுகிய இடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள் மக்களின் வாழ்விடத்தை, வாழ தகுதியற்ற இடமாக மாற்றியுள்ளதாக புகார்கள் எழுந்திருக்கிறது. குறிப்பாக வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் ரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் என சூழலைப் பாதிக்கும் 40-க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. வடசென்னையில் ஏற்கெனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. விரைவில் 800 MW உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு அலகு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இது தமிழக அரசின் முயற்சி மட்டுமல்ல, தேசிய அளவில் வளர்ந்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் அனல்மின் நிலையங்கள் அவசியம் என்று உணரப்பட்டிருக்கிறது. இதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. தமிழகத்தில், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு முயன்று வருகிறது. எல்லாம் சரிதான் ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழல் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளனர். அனல்மின் நிலையம் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, தமிழக அரசு சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்றிருந்த சீமான், "அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீட்டை அதன் அருகில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று காட்டமாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது, "கருத்து கேட்பு கூட்டம் என்பது, சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் கருத்தை கேட்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால் நீங்களாக சிலரை அழைத்து வந்து, அவர்கள் உங்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும்போது அதற்கு ஆதரவு கொடுத்து, மக்களின் மனநிலையை கட்டமைக்க கூடாது. இதற்கு கருத்து கேட்பு கூட்டத்தையே நடத்த வேண்டிய அவசியமில்லை. இங்கு வாழ்வதற்கே இடமில்லை. ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கும், வாழ்வாதாரம் உயரும் என்றெல்லாம் கூறி ஏன் கருத்துக்களை கேட்கிறீர்கள்? மின் உற்பத்திக்கு மாற்று வழி இருக்கும்போது அதை நோக்கி நகர்வதை விட்டுவிட்டு இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியிருக்கிறார்.

Related Post