ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஒரே குரலாக எதிர்க்கட்சிகள்.. என்ன காரணம்?

post-img

டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே ராஜ்யசபா தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சி எஎம்பிக்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் இதில் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகக் காரசார விவாதங்கள் நடந்து வருகிறது. லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலும் முக்கிய விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் ராஜ்யசபா தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின் 67(பி) பிரிவின் கீழ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 70 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற போதே எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எம்.பி.க்களிடம் கையெழுத்துக்களை வாங்கினர். ஆனால், அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே ராஜ்யசபாவில் சில எம்பிக்களிடம் பாகுபாடு காட்டுவதாக அதிருப்தியை வெளிப்படுத்திய இந்தியா கூட்டணி, இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறதாம். மற்ற விவகாரங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே சலசலப்பு இருக்கும் போதிலும், ராஜ்யசபா தலைவர் தன்கர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் ஒற்றுமையாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆதரவு: ராஜ்யசபா தலைவராக இருக்கும் ஒருவர் யாருக்கும் ஆதரவாக இருக்கக்கூடாது என்ற போதிலும் தன்கர் எப்போதும் ஆளும் கட்சி எம்பிக்களுக்கு சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும் போது அடிக்கடி அவர்களின் பேச்சுக்களை நிறுத்துவதாகவும், முக்கியமான விஷயங்களில் விவாதத்திற்கு போதுமான நேரத்தைத் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள்: குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்திருக்கும் போது அவரை பேச அனுமதிக்க வேண்டும் என்பது ராஜ்யசபாவின் விதியாகும். அப்படியிருக்கும் போது காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதாகவும், அவரது மைக் வேண்டுமென்றே அணைக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மேலும், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், சில எம்பிக்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்துகளைக் கூறியிருப்பதாகவும், இது நாடாளுமன்ற விதிகளை மீறுவதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
எப்போது: ஒரு எம்பி பேசும்போது மற்றவர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்பதை ராஜ்யசபாவின் 238(2) விதி தெளிவாகக் கூறுகிறது. இந்த விதி எம்பிக்கள் மட்டுமின்றி ராஜ்யசபா தலைவருக்கும் பொருந்தும் என்றும் குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான தன்கர் இந்த விதியை மீறுவதை ஏற்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ராஜ்யசபா மீண்டும் காலை கூடும் நிலையில், நாளைய தினமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Post