ஸ்டால் 17ல் “பீஃப் சுக்கா”.. சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பா? வெளியான விளக்கம்!

post-img
சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி (பீஃப்) புறக்கணிக்கப்படவில்லை; உணவுத் திருவிழாவின் 17வது அரங்கில் பீஃப் சுக்கா உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது என பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் குற்றச்சாட்டுக்கு உணவுத் திருவிழா ஏற்பாட்டாளரான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவு திருவிழாவை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்து, உணவுகளை ருசித்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவண்ணத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த உணவுத் திருவிழாவில், மதுரை கறிதோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், சேலம் தட்டுவடை செட், நெல்லை அல்வா, விருதுநகர் பால்கோவா உள்ளிட்ட 286 வகையான சைவ, அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோவை கொங்கு மட்டன்‌ பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில்‌ நோ பாயில்‌, கரூர்‌ தோல்‌ ரொட்டி - மட்டன்‌ கிரேவி, தருமபுரி ரவா கஜூர்‌, நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர்‌ முட்டை ஊத்தாப்பம்‌, காஞ்சிபுரம்‌ கோயில்‌ இட்லி, சிவகங்கை மட்டன்‌ உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர்‌ ராகி கொழுக்கட்டை, தஞ்சாவூர்‌ பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. மயிலாடுதுறை இறால்‌ வடை, நாகப்பட்டிணம்‌ மசாலா பணியாரம்‌, கன்னியாகுமரி பழம்‌ பொறி, அரியலூர்‌ வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய்‌ லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட்‌ மால்ட்‌ பொடி, கடலூர்‌ சங்குப்பூ சர்பத்‌, தருமபுரி குதிரைவாலி ரோஸ்‌ லட்டு, திண்டுக்கல்‌ காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர்‌ பால்கோவா, காஞ்சிபுரம்‌ முட்டை மிட்டாய்‌, சேலம்‌ ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர்‌ பாசிப்பருப்பு உருண்டை, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, சென்னை தயிர்‌ பூரி உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நாட்களாக நடந்துவரும் இந்த உணவு திருவிழா வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழாவில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். அதே போல் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து உணவுத் திருவிழாவை கொண்டாடும் வகையில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் போன்ற நடனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சியை (பீஃப்) மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்தது. நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டு சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், உணவுத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். சென்னை உணவுத் திருவிழாவில் பீப் கறியும் விற்கப்பட்டு வருகிறது. உணவுத் திருவிழா அரங்கத்தில் கரூர் மாவட்ட அரங்கில், அதாவது 17 ஆம் எண் ஸ்டாலில் பீப் சுக்கா உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி உணவுகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post