மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்களும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI) நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் பெருக்க தளமான அரிட்டாபட்டி பகுதி உள்ளது. இங்கு கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு, இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இதற்கு அந்த பகுதி மக்களும் தமிழக அரசும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரிட்டாபட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைக்கக் கூடாது. மத்திய அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரிட்டாபட்டி மக்களும் இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை எப்போதும் தமிழக அரசு தராது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான் முதல்வராக இருக்கும் வரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தரமாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அப்படி ஒரு நிலை வந்தால் நான் என் பணியை ராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானப்பட்டது. இதனிடையே அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அரிட்டாபட்டி கிராமத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.