ஒடிஷா: காங்.எம்பி வீட்டில் அலமாரிகளில் ரூ.300 கோடி! 5-ம் நாளாக எண்ணும் 40 மெஷின்கள்-

post-img

புவனேஸ்வர்: ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ500 நோட்டுகள் ரொக்கம் இதுவரை ரூ300 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை எண்ணும் பணிகள் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. ஒடிஷாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கார், ரூர்கேலா ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இச்சோதனைகளில் அலமாரிகளிலும் பைகளிலும் ரூ500 நோட்டுகள் ரொக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பல அலமாரிகளில் ரூ500 கட்டுகள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனையடுத்து சிக்கிய ரொக்கத்தை எண்ணும் பணி தொடங்கியது. தற்போது வரை ரூ300 கோடி ரொக்கம் சிக்கியிருக்கிறது.
இப்பணத்தை எண்ணுவதற்கு 40-க்கும் மேற்பட்ட மெஷின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில பணம் எண்ணும் இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கியதால் பழுதடைந்தும் போயின. மொத்தம் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். இதுவரை எண்ணிய பணத்தை வண்டி வண்டியாக வங்கிகளுக்கு கொண்டு சென்று அதிகாரிகள் பாதுகாத்தும் வருகின்றனர். இன்று 5-வது நாளாக இந்தப் பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


நாட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் இவ்வளவு பெரி தொகை ரொக்கமாக கிடைத்திருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மக்களுக்கே திருப்பித் தரப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இதனிடையே தீரஜ் சாஹூவின் இந்த வருமான வரி ஏய்ப்புக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; தீரஜ் சாஹூ தமது தொழில் நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறைக்கு விளக்கம் தருவார் என்றார். ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சோனியா காந்தி குடும்பத்தின் ஏடிஎம் மெஷின் போலவே தீரஜ் சாஹூ செயல்பட்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

 

Related Post