மகளிர் வங்கி கணக்கில் விழும் ரூ.1000.. எப்படி முதலீடு செய்யலாம்? ஆனந்த் சீனிவாசன்

post-img

சென்னை: தமிழ்நாடு அரசு இப்போது மாதாமாதம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இதை எப்படி முதலீடு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு இப்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின்படி தமிழ்நாடு முழுக்க இருக்கும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.


இத்திட்டத்தில் மாதாமாதம் கிடைக்கும் ரூ. 1000 உரிமை தொகையை எப்படி எல்லாம் முதலீடு செய்யலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். பல ஆப்ஷன்கள் கொட்டி கிடைக்கும் நிலையில், உங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


குழந்தைகள் இருந்தால்: வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் தாராளமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர் இதைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின்படி குறைந்தபட்சம் தபால் நிலையங்கள் அல்லது வங்கிகளில் கணக்கை 1000 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் இப்போது 8 சதவீத வட்டி விகிதம் தரப்படுகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் போலவே வீட்டில் ஆண் குழந்தைகள் இருந்தால் பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். இதில் கணக்கைத் தொடங்கும் போது குறைந்தது 100 ரூபாய் கணக்கில் செலுத்த வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் கல்வி மற்றும் திருமணத்திற்கு தாரளாமாக இந்த இரண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வேறு என்ன ஆப்ஷன் இருக்கு: அடுத்து கிசான் விகாஸ் பத்ரா அல்லது கேவிபி எனப்படும் மத்திய அரசு ஊக்குவிக்கப்படும் சிறு சேமிப்பு முறையில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு இப்போது 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாம் 113 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் நாம் 1000 ரூபாயைக் கூட செலுத்தி முதலீடு செய்யலாம் என்பதால் இதுவும் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும்.


மேலும், தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்கிலும் வைக்கலாம். இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கைப் போன்றது தான். இருப்பினும், வங்கியில் கிடைப்பதைக் காட்டிலும் இதில் அதிக வட்டி கிடைக்கும். இதில் இப்போது 6.6% வட்டி வழங்கப்படுகிறது. மேற்கூறிய திட்டங்களைப் போல இல்லாமல்.. இதில் எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுக்க முடியும்.


நேஷ்னல் சேவிங் சர்டிபிக்கேட் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். இதற்கான கணக்கை நாம் எளிமையாக ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஆரம்பிக்கலாம். இதில் நாம் குறைந்தபட்சம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம் என்பதால் ஏழை மக்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு முதலீட்டுக் கருவியாக இது இருக்கிறது. இத்திட்டத்தில் இப்போது 6.8% வட்டி வழங்கப்படுகிறது.


முதியவர்கள்: அடுத்து உரிமை தொகை திட்டத்தில் பயன் பெறுவோர் 60 வயதைக் கடந்த முதியோராக இருந்தால் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். 60 வயதைக் கடந்த யாராக இருந்தாலும் இதில் முதலீடு செய்யலாம். இதில் நமக்குச் சேமிப்பு கணக்கு அல்லது எஃப்டியை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கும். இப்போது இதில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.


அதேபோல சிறு சேமிப்புத் திட்டமாக விளங்கும் பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம் ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்யலாம். இதில் 7.1% வட்டி தரப்படுகிறது. இப்படி முதலீடு செய்யப் பல ஆப்ஷன்கள் கொட்டி கிடக்கிறது. ஆனந்த் சீனிவாசன் சொல்வதைப் போல நமக்கு ஏற்றதைச் சரியாகத் தேர்வு செய்து முதலீடு செய்தால் இன்று மட்டுமின்றி அடுத்து வரும் நாட்களிலும் எந்தவொரு கவலையும் இல்லாமல் நாம் இருக்கலாம்.
இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை யாரும் பொருளாதார ஆலோசனையாகக் கருதக் கூடாது. பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.

 

Related Post