திருவள்ளூர்: குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிகிறது.. கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் சிஎம்டிஏ அதிகாரிகளும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல, மேற்கு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா செல்லும் மக்களுக்காகவும் குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து முனையம் தயாராகி வருகிறது..
சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் இந்த புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆம்னி பேருந்துகள்: இதற்காகவே, மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில் 395 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பமானது.. புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் வசதியும் இங்கு உள்ளதாம்.
இந்நிலையில், இந்த புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு மாற்று சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து சிக்கல் எழுந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில், 7 கிராமங்கள் வழியாக புதிய சாலை அமைக்க நிலம்எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம்னி பஸ்கள்: இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் சொல்லும்போது, "சென்னை - பெங்களூரு சாலையில் இருந்து, பேருந்து நிலைய பகுதிக்கு செல்லவும், வெளியேறவும் ஒரே சாலைதான் உள்ளது. பொதுவாக, ஆம்னி, வெளியூர் பஸ்கள் உள்ளே சென்று வருவதற்கு தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும்.. அதேபோல, மாநகர பஸ்கள், தனியார் வாகனங்கள் வந்து செல்வதற்கும் தனித்தனி நுழைவாயில்கள், பாதை வசதிகள் இருக்க வேண்டும்.
ஆனால், குத்தம்பாக்கத்தில், அனைத்து வகை வாகனங்களும், ஒரே பாதை மட்டுமே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான தீர்வை இப்போதே அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்" என்றார்கள்.
புதிய லூப் சாலை: இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் சொல்லும்போது, "திருமழிசை புது நகர் திட்டத்தின் கீழ், இங்கு வெளிவட்ட சாலை - சென்னை பெங்களூரு சாலையை இணைக்கும் வகையில், புதிய லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோலப்பஞ்சேரி, துக்கானம்பட்டு, உடையவர் கோவில், வரதராஜபுரம், காவல்சேரி, திருமழிசை, கீழ்மணம்பேடு, நெஞ்சேரி, குத்தம்பாக்கம், வெள்ளவேடு, நரசிங்கபுரம், பர்வதராஜபுரம், பழங்சூர் கிராமங்களில், 1,605 ஏக்கர் நிலத்தை, நில தொகுப்பு முறையில் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நிலத்தை பயன்படுத்தி, 100 அடி அகலத்தில் லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குத்தம்பாக்கம்: இதனால், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு மேம்படும்.. மொத்தத்தில் கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்" என்றனர்.