யுஜிசி நெட் தேர்வு! மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? சு.வெங்கடேசன்

post-img
மதுரை: மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் பொங்கல் விடுமுறை நாட்களை குறி வைப்பது ஏன் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே சிஏ தேர்வு பொங்கல் விடுமுறையில் வந்ததை தற்போது கோரிக்கை விடுத்ததன் பேரில் மாற்றி பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் திரு பிரதீப் சிங் கரோலா இ.ஆ.ப அவர்களுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன். இவ்வாறு சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்எஃப், பிஎச்டி சேர்க்கை உள்ளிட்டவைகளுக்கு தகுதி தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் ஆகிய இரு முறை நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் முனைவர் படிப்பிற்கான தேர்வுக்கும் இது தகுதித் தேர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. முனைவர் பட்டம் படிப்போர் ஜேஆர்எஃப் எனப்படும் கல்வி உதவித் தொகை பெற இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில் இந்த தேர்வு ஜன. 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விடுமுறை நாட்களிலும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஏ தேர்வு குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுக்க சார்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வு (பட்டயக் கணக்காயர்) நடத்தப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு பவுண்டேஷன் தேர்வுக்கான அட்டவணையை தி சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அக்கவுண்டிங் தேர்வானது ஜனவரி 12 ம் தேதியும் பிசினஸ் லாஸ் தேர்வு ஜன 14 ஆம் தேதியும் திறனறித் தேர்வு ஜன 16 ஆம் தேதியும் பிசினஸ் எக்கனாமிக்ஸ் தேர்வு ஜன 18ஆம் தேதியும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த தேர்வு தேதி மாற்றப்பட்டது.

Related Post