என் அனுமதியுடன் தான் சென்றார்.. ஆதவ் அர்ஜுனா இன்னும் கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார் - திருமா

post-img

சென்னை: புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னிடம் அனுமதி வாங்கிய பிறகே ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை போக வேண்டாம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை. ஆதவ் அர்ஜுனா இன்னும் கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார். தொடர்பிலும் உள்ளார். ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்த பிறகு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம், ‛‛எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விழாவை புறக்கணித்தார்.

நடிகர் விஜய் நூலை வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்று கொண்டார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில் அவர் திமுகவின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‛‛பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலை செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்’’ என்று பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் மற்றும் திமுக தொண்டர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆதவ் அர்ஜுனா மீது இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆதவ் அர்ஜுனா பேசியது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அடுத்தக்கட்டமாக ஆலோசனை நடத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். இதனால் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை பாயுமா ? இல்லையா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் இன்று சென்னையில் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆதவ் அர்ஜுனா இன்னும் கட்சி பொறுப்பில் தான் உள்ளார் என்று கூறியுள்ளார். இதுபற்றி திருமாவளவன் கூறுகையில், ‛‛என்னிடம் அனுமதி வாங்கிய பிறகே புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை போக வேண்டாம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.
புத்தக வெளியீட்டு விழாவை தவிர்க்க வேண்டாம். ஆனால் கவனமாக பேசுங்கள் என ஆதவ் அர்ஜுனாவிடம் கூறி இருந்தேன். ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து கட்சி பொறுப்பில் நீடித்து வருகிறார். தலித் அல்லாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ஆலோசித்து தான் முடிவெடுப்போம். திமுக, அதிமுகவை போல் விசிகவும் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல’’ என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து கட்சி பொறுப்பில் நீடிக்கிறார் என்பதை திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Related Post