புதுக்கோட்டை: நாட்டுப்புற பாடகி தஞ்சை செல்வியின் உடல்நிலையைப் பற்றி அறிந்த தமிழக அரசு அவருக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈசன். இதில் இடம்பெற்ற 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' என்ற பாடல் தமிழ்நாட்டில் உள்ள பட்டி தொட்டி முழுக்க இருந்த பாமர ஜனங்களையும் கவர்ந்து இழுத்தது. இந்தப் பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை. தொலைக்காட்சிகளில் பலரும் விரும்பு கேட்கும் பாடல பட்டியலில் இடம்பெற்றது. அந்தளவுக்கு மண்வாசனை வீசும் தனது நாட்டுப்புறக் குரலால் தமிழக மக்களைக் கவர்ந்து இழுத்திருந்தார் பாடகி தஞ்சை செல்வி.
ஒரு அபலைப் பெண்ணின் கண்ணீர் கதையை விளக்கிக் கூறும் இந்தப் பாடலின் வரிகளின் உள்ள உணர்வுக்கு ஏற்ப தஞ்சை செல்வி தன் குரலால் உருக வைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநராக வேலை பார்த்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ் புதுவிதமான பாணியில் ஆட்டத்தை வடிவமைத்திருந்தார். அதுவும் பாட்டின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் பாடலின் வெற்றியை தொடர்ந்து தஞ்சை செல்வி 'அழகர்சாமி குதிரை', 'அம்புலி', 'மத யானைக்கூட்டம்' , 'போராளி' என மேலும் சில படங்களில் வாய்ப்பை பெற்றார். கிட்டத்தட்ட 50 பாடல்களைப் பாடி இருக்கிறார். ஆனாலும், அவர் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடுபவர் என்பதால் தொடர்ந்து வாய்ப்புக்கள் சினிமாவில் கிடைக்கவில்லை. இன்றைக்கு ஹிப் ஆப், ராப் என சினிமா பாடல்களின் திசை வேறு பக்கம் போய்விட்டது. இளம் இசையமைப்பாளர்கள் யாரும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும் பாடகிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை.
பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாத தஞ்சை செல்வி புதுக்கோட்டை அருகே உள்ள தட்சணாபுரம் விளக்கு கிராமத்தில் ஓலைக் குடிசையில் மிக ஏழ்மையில் வாழ்ந்து வந்த செல்விக்கு திடீரென்று முடக்குவாதம் நோய் பாதிக்கப்பட்டது. அதானல் அவரால் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரால் பேச கூட முடியாத அளவுக்கு உடல் பலவீனமடைந்தது. கணவர் படிக்காதவர். அவரது சம்பாத்தியம் இவரது மருத்து சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. எனவே அவர் தனது உயிரைக் காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அது குறித்த செய்தியை முன்பே ஒன் இண்டியா மூலம் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் அவருக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. தஞ்சை செல்வி மருத்துவ உதவிக் கேட்டு கோரிக்கை வைத்தது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கலைவாணி நேரடியாகச் செல்வி வசித்து வரும் வீட்டிற்கே சென்று அவருக்கு மருத்து உதவிகளை அரசு செய்து தருவதற்காக உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய டாக்டர் கலைவாணி, "சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து பாடகி செல்விக்கு மருத்துவ உதவிகளைச் செய்யச் சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்தது. ஆகவே, நானும் எலும்பியல் துறை மருத்துவர் டாக்டர் ராஜ்மோகனும் வந்து செல்வியின் உடல்நிலை குறித்து விசாரித்தோம். செல்வி முன்பே முடக்குவாதத்திற்கான மாத்திரிகளை எடுத்து வருகிறார். முன்பைவிட அவர் இப்போது பரவாயில்லை, ஆனாலும், அவருக்கு மேல் சிகிச்சைகள் தேவை. அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற விரும்புகிறார்.
அதற்கு முன்பாக புதுக்கோட்டையில் அவர் முழு உடல் பரிசோதனை செய்து என்ன மாதிரியான சிகிச்சை அவருக்குத் தேவையாக உள்ளது என்பதைக் கண்டறிந்து பரிந்துரை செய்ய இருக்கிறோம்" என்று பாலிமர் செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஊடகங்களில் தொடர்ந்து தஞ்சை செல்வியைப் பற்றி செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது அவருக்கு அரசு உதவி கிடைத்துள்ளது. அவர் தனது உடல்நிலை குறித்த செய்தியை வெளியிட்டு முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஊடகங்கள் அனைத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியான 24 மணிநேரத்திற்கு அவரது துயரத்தை அரசு துடைக்க முன்வந்துள்ளது. அரசு அதிகாரிகள் தனது வீடு தேடி வந்து நலம் விசாரித்த போது அவர் மனதளவில் பாதி நம்பிக்கையைப் பெற்றுவிட்டார். விரைவில் இந்த நாட்டுப்புறக் குயில் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்க வேண்டும். அதுவே மக்கள் அனைவரது விருப்பம்.