தள்ளிப்போகிறது ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! சரியான தருணத்திற்காக காத்திருக்கும் மத்திய அரசு

post-img
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மசோதா தாக்கல் தள்ளிப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி மசோதா தாக்கலுக்கு பிறகே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தகவல். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதில் பல்வேறு சந்தேகங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். குறிப்பாக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநில சட்டப் பேரவைகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மத்திய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதுபோல இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமாகும் என்று கூறி வருகின்றன. இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜகவுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இருப்பினும் மசோதாவை கொண்டு வந்து அதை சட்டமாக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனையால் 16-ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம் பெறவில்லை. அதாவது, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மற்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டும் செய்யப்படும். இப்படி நேற்று திருத்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த மசோதாவின்போது இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். ஒன்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82A-வில் புதியதாக பிரிவு 2-ஐ சேர்க்க வேண்டும். இது சட்டப்பேரவை மற்றும் மக்களவை பதவி காலங்களை ஒரே நேரத்தில் நிறைவு செய்ய வழிவகுக்கிறது. சட்டப்பிரிவு 83 (2)-ல் மேலும் புதியதாக இரண்டு பிரிவுகளை சேர்க்கவும் இந்த மசோதா வழி வகுக்கிறது. இது சட்டப்பேரவை மற்றும் மக்களவையை கலைக்க வழிவகுக்கிறது. இரண்டாவது மசோதாவை பொறுத்தவரை, புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்புடைய சட்டங்களை திருத்த வழி வகுக்கிறது. இதன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மசோதாக்களை தாக்கல் செய்ய சரியான தருணத்தை எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருக்கிறது. ஆகவேதான் இன்று இந்த மசோதாக்களை தாக்கல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

Related Post