டெல்லி: இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்து தேசியக் கொடியை ஏற்க மறுத்து எரித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் சாசன பாதுகாப்பு குறித்து பாடம் நடத்துகிறார்களா? என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கையில் மல்லிகார்ஜூன கார்கே இந்த கேள்வியை முன்வைத்தார்.
அரசியல் அமைப்புச் சட்டம் மீதான விவாதத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: எங்களுக்கு எதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது தெரியும். நான் முனிசிபல் பள்ளியில் படித்தேன். நிர்மலா சீதாராமன் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர். அவரால் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் எழுதவும் முடியும். இந்தியும் நன்றாக தெரியும். ஆனால் அவருடைய செயல்கள் சரியானவை அல்ல.
இந்த நாட்டின் தேசியக் கொடியை வெறுத்தவர்கள்.. இந்த தேசத்தின் அசோக சக்கரத்தை வெறுத்தவர்கள்.. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்க மறுத்து வெறுத்தவர்கள்தான் இன்றைக்கு எங்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளில் இதே அரசியல் சாசனத்தை தீ வைத்து எரித்தவர்கள்தான் அவர்கள். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியின் உருவபொம்மைகளை இதே டெல்லியில் ராமலீலா மைதானத்தில் தீயிட்டு கொளுத்தி மகிழ்ந்தவர்கள்தான் இன்று எங்களுக்கு அரசியல் சாசனம் பற்றி பாடம் நடத்துகிறார்களாம்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கமானது எப்போதும் அரசியல் சாசனத்தை ஏற்கவே இல்லை. ஏனெனில் இந்த அரசியல் சாசனம் மனுஸ்மிருதி அடிப்படையில் இல்லை என்பதாலேயே ஆர்.எஸ்.எஸ். இதனை ஏற்க மறுத்தவில்லை. நாட்டின் அரசியல் சாசனத்தையும் தேசியக் கொடியையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்றுக் கொண்டதே கிடையாது. 2002-ம் ஆண்டு ஜனவரி 26-ல்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பதும் வரலாறு.
நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, பொய் சொல்லுவதில் முதன்மையானவர். நாட்டு மக்களுக்கு ரூ15 லட்சம் தருவோம் என்று சொன்னவர் மோடிதான்.. ஆனால் அதனை செய்யவில்லை. இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க கடந்த 11 ஆன்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி செய்தது என்ன என்பதை விளக்கத்தான் முடியுமா?
இன்று வங்கதேச விடுதலை நாள். மறைந்த பிரதமர் இந்த்இரா காந்தி அம்மையார்தான் இந்தியாவை பாதுகாக்க இரும்புப் பெண்மணி. வங்கதேச சிறுபான்மையினருக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிய போது பாஜகவினர் உள்நோக்கம் கற்பித்தனர். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தியை அவதூறு செய்து கொண்டிருக்கிறது பாஜக. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
முன்னதாக ராஜ்யசபாவில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேரு முதல் ராஜீவ் காந்தி வரையில் ஒட்டுமொத்த குடும்பமும் கருத்து சுதந்திரம், பெண் உரிமைகளுக்கு எதிராக எப்படி இருக்கிறது என வரலாற்று நிகழ்வுகளைப் பட்டியலிட்டு விமர்சித்தார். நேரு குறித்த புத்தகம், சினிமாக்களை இந்திரா காந்தி தடை செய்ததையும் விவரித்தார் நிர்மலா சீதாராமன். பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை ராஜீவ் காந்தி கொண்டுவராதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார் நிர்மலா சீதாராமன்.