வாக்கு தவறிய ரஷ்யா.. பெட்ரோலுக்காக அரபு நாடுகளை நாட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!

post-img
டெல்லி: இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்து வந்தது. தற்போது இந்த சப்ளை குறைந்துள்ளதால் மீண்டும், எண்ணெய் கொள்முதலுக்கு அரபு நாடுகள் பக்கம் செல்ல இந்திய எண்ணெய் நிறுவனங்கள் யோசித்து வருகின்றன. அரபு நாடுகளில் எண்ணெய் வளம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் தூரம்தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் யுனைட்டட் அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிலிருந்துதான் இந்தியா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நாடுகள் அனைத்தும் குறைந்தபட்சம் 2000 முதல் அதிகபட்சம் 3000 கி.மீ வரை தூரம் இருக்கிறது. எனவே அங்கிருந்து எண்ணெய்யை கொண்டுவருவது சிக்கலானதாக உள்ளது. இரண்டாவது பிரச்சனை பணப்பரிமாற்றம். அதாவது அரபு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கும்போது அவர்களுக்கு அமெரிக்க டாலரில்தான் பணம் கொடுக்க வேண்டும். எனவே இந்தியா கணிசமான அளவுக்கு டாலர் இருப்பை வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்த இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ரஷ்யா பக்கம் தாவின. ரஷ்யா அரபு நாடுகளை விட தூரமாக இருந்தாலும் அங்கு இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம். இது எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் தரக்கூடிய விஷயம். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்திருந்தது. எனவே ரஷ்யா எண்ணெய் விற்பனையை அதிகரித்து இந்த தடையை சரி செய்ய திட்டமிட்டது. இந்த புள்ளியில்தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும், ரஷ்யாவும் கரம் கோர்த்தன. அதிக அளவில் இறக்குமதியை எண்ணெய் நிறுவனங்கள் செய்தன. விலையும் குறைவு, சொந்த கரன்சியில் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்கிறபோது வர்த்தகம் அதிகரித்தது. ஆனால் எல்லா விஷயங்களுமே ஒரு புள்ளியில் உச்சத்தை தொட்டு பின்னர் சரிய தொடங்கும். அதேபோல தற்போது ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகமும் சரிய தொடங்கியுள்ளது. அதாவது தேவைக்கு ஏற்ப ரஷ்யா எண்ணெய்யை வழங்குவதில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த நவம்பர் முதல் கச்சா எண்ணெய் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று அந்நிறுவனங்கள் கூறியுள்ளன. மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கும் ஜனவரிக்கு வழங்க வேண்டிய சப்ளையில் சுமார் 8-10 மில்லியன் பீப்பாய்கள் பற்றாகுறையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா உக்ரைனுடன் தீவிரமாக போர் செய்து வருவதால் அந்நாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்திருக்கிறது. எனவே, சொந்த நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா கடடுக்குள் கொண்டுவந்திருக்கிறது. ஆகவே வேறு வழியின்றி மீண்டும் அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்த கொள்முதல் தொடங்கும் என்றும், ஒரு சில மாதங்களில் பழைய மாதிரியான கொள்முதல் முறைக்கு இந்தியா திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post