சென்னை: பால் குடிப்பது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.. இதுகுறித்த மாறுபட்ட கருத்துக்களும் அவ்வப்போது எழுந்தவண்ணம் உள்ளன.
பால் குடித்தால் உடல் எடை கூடும், பால், தயிர், அரிசி என வெள்ளை பொருட்களையே தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக, 250 மிலி அதாவது 1 கப் பாலில் 5 கிராம் கொழுப்பும், 152 கலோரிகளும் உள்ளன. குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவார்கள்.
கலோரிகள்: ஆனால் மற்றொரு சாராரோ, உடல் எடையை குறைக்க விரும்பினால், ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலை குடித்தாலே போதும்.. அதிலுள்ள கால்சியம் சத்தானது, மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை எரிக்க உதவுகிறது.. இதனால் வயிறு நிரம்பும் உணர்வு கிடைப்பதால், மற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் தினமும் 3 முறை பால் அல்லது பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட்டதால், உடல் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.
உடல் எடை: அதனால், பாலை தவிர்ப்பவர்களை விட பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவோர் எளிதில் உடல் எடையை குறைக்கலாம் என்கிறார்கள். மேலும், பால் குடிப்பதால் உடல் பருமன், டைப் 2 வகை சர்க்கரை நோய், உடல் செயல்திறன் பாதிப்பு போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, தினமும் 250 மி.லி பால் குடிப்பது உங்கள் உடலுக்கு நன்மையையே தருமாம்.
அதேபோல, பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவது, கொழுப்பை அதிகரிக்கும், இதயத்திற்கு கெடுதல் என்கிறார்கள்... ஆனால், மற்றொரு சாராரோ, பாலை அளவுடன் குடித்தால் தவறில்லை, இதனால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர்...
ஒரு கப் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளதால், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார்கள். ஆனால், மற்றொரு சாரார் இதற்கு முரணான கருத்தை சொல்கிறார்கள்...
எலும்பு முறிவு: இடுப்பு எலும்பு முறிவு, பால் பருகும் மக்களிடம்தான் அதிகம் உள்ளதாகவும், பால் அதிகம் சாப்பிடாத மக்களிடம், இது குறைவு என்றும் ஆய்வு சொல்கிறதாம். பாலில் கால்சியம் நிறைய இருந்தாலும், பாலின் அமிலத்தன்மையால் எலும்புகளில் இருக்கும் கால்சியம் உருகி, நீரில் வெளியேறுகிறது, இதனால், எலும்புகள் பலவீனமாகின்றன என்று ஆய்வு முடிவுகளில் தெரியவருகிறதாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தாலும்சரி, அல்லது சளி, இருமல், மூக்கடைப்பு பிரச்சனையாக இருந்தாலும்சரி, சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது சிறந்த மருந்து என்கிறார்கள்.. சூடான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவதால் உடலின் கிருமிகள் அனைத்தும் வெளியேறும் என்பதால், மசாலா பால் பலரும் விரும்புகிறார்கள்.
ஹீமோகுளோபின்: ஆனால், குறைந்த ஹீமோகுளோபின், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதாவது ஆபரேஷனுக்கு தயாராக இருப்பவர்கள், இந்த மஞ்சள் பாலை குடிக்கக்கூடாது என்கிறார்கள்.. அதேபோல, இதிலுள்ள ஆக்சலேட்டுகள் உடலில் சிறுநீரக கற்கள் நோயை அதிகப்படுத்துவதோடு சிறுநீரக செயலிழப்பு அபாயத்தையும் அதிகரிக்கும் என்றும் செய்கிறார்கள்.
மஞ்சள் ஒரு பாதுகாப்பான மூலிகை என்றாலும்கூட, மஞ்சள் கொடுப்பதற்கு முன்பு டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.
விவாதங்கள்: தினமும் பால் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், மெட்டபாலிசம் அதிகரிக்கும்.. செரிமான கோளாறுகள் நீங்கும், சரும அழகுக்கு உதவும் என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும், நீரிழிவு நோய்களையும் பாலை தவிர்க்க சொல்கிறார்கள்.. ஆக, காலம் காலமாகவே குடிக்கப்பட்டு வரும் பானமாக இருந்தாலும்கூட, பால் தொடர்பான விவாதங்களும் தொடர்ந்து எழுந்தபடியே நீடித்து வருகின்றன.
Weather Data Source: Wettervorhersage 21 tage