வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் உற்சாக வரவேற்பு அளித்தார். மோடியை காண கூடியிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி..மோடி என்று முழக்கமிட்டனர். தலைவா என்றும் அழைத்து உற்சாக முழக்கமிட்டனர். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினர் ஸ்பெஷல் விருந்து அளித்தனர்.
பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 20ஆம் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட மோடி 21ஆம் தேதியான நேற்று ஐநா தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் பிரதமர் மோடி. யோகா நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் சென்றார் பிரதமர் மோடி. கொட்டும் மழையிலும் விமான நிலையத்திற்கு வந்து ஏராளமானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாஷிங்டனின் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மோடி மோடி என்று உற்சாகமாக குரல் கொடுத்தனர். ஒரு சிலரோ தலைவா என்று முழக்கமிட்டு மோடி மீதான பாசத்தை வெளிப்படுத்தினர். தன்னை அழைத்த கூட்டத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் மிக முக்கியமான நாளாக இன்று அமைந்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கிய மோடியை கை குலுக்கி உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இருவரும் இணைந்து செய்தியாளர்களின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததனர். வெள்ளை மாளிகைக்கு வந்த மோடிக்கு அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் தம்பதியினர் சிறப்பு பரிசை அளித்தனர்.
விருந்தினராக சென்ற பிரதமர் மோடியும் சந்தனப்பெட்டி, வைரக்கல்லை பரிசாக அளித்தார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் சுவைமிக்க வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன. சில உணவுவகைகளில் அமெரிக்க, இந்திய தேசிய கொடி வண்ணமும் அலங்கரித்தன. வெள்ளை மாளிகையின் மூத்த ஷெ ப் கிரிஸ் காமர்போர்ட் இந்த உணவு வகைகள் குறித்து விவரித்தார்.
சத்து நிறைந்த திணையிலான பல்வேறு உணவு வகைகள், மில்லட்கேக்ஸ், ஹைதராபாத்தின் புகழ்பெற்ற உணவுகளும் இடம் பெற்றிருந்தன. காளான் மற்றும் சோளத்தினால் ஆன உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. பச்சை காய்கறிகளுடனான சாலட், தர்பூசணி, வெண்ணெய் சாஸ், டாங்கி அவகொடாசாஸ் விருந்தில் இடம் பெற்றிருந்த அனைத்து உணவு வகைகளும் சைவமாகவே இருந்தன.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான நினா கர்டீஸ் விருந்துக்கான ஸ்பெஷல் சைவ மெனுக்களை தயார் செய்திருந்தார். வயலின் இசையுடன் பிரதமர் மோடிக்கு தடபுடலாக விருந்தளித்தார் ஜோ பைடன் ஜில் பைடன் தம்பதியினர். சிறப்பான வயலின் இசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும்.
அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் விருந்து அளிக்கும் 3வது உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். தனக்கு இரவு விருந்தளித்த ஜோ பைடன் ஜில் பைடன் தம்பதியினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மோடி ஜோ பைடன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்த இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பிரதமருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, அமெரிக்கா சென்ற மோடி, நாடாளுமன்றத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25ஆம் தேதிகளில் எகிப்தில் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.