சென்னை: சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகை வென்றுள்ளார். இது அவரது இத்தனை ஆண்டு கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசாகும். அதேநேரம் பரிசுத்தொகையாக அவருக்கு ரூ. 11 கோடி தரப்பட்டு இருந்தாலும், முழு தொகை அவருக்கு அப்படிப் போகாது.. எந்தளவுக்கு அதில் வரி பிடித்தம் செய்யப்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சிங்கப்பூரில் கடந்த வாரம் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷும் சீனா சார்பில் டிங் லிரனும் களமிறங்கினர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: கடைசி சுற்று வரை கூட இதில் யார் வெற்றியாளர் என்பது தெரியாமலேயே இருந்தது. பலரும் போட்டி டிரா ஆகும் என்றே நினைத்தனர். அந்தச் சூழலில் சீன வீரர் ஒரு சிறு தவறு செய்த அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட குகேஷ் வெற்றி பெற்றார். இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குகேஷ் சுமார் ரூ. 11 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்றதாக மதிப்பிடப்படுகிறது
அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 21 கோடி ரூபாய் ஆகும். போட்டியின் விதி முறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் 1.68 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரி சமமாகப் பிரித்து வழங்கப்படும்
பரிசுத்தொகை: குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில், இதன் மூலம் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது. இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாகவே ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார்.
எவ்வளவு வரி: சரி விஷயத்திற்கு வருவோம்.. அவர் தனது பரிசுத்தொகையில் எந்தளவுக்கு வரி செலுத்த வேண்டும். இந்திய வரிச் சட்டத்தின் பிரிவு 194Bஇல் லாட்டரிகள், கிராஸ்வேர்ட் புதிர்கள், டிவி நிகழ்ச்சிகள், கார்ட் கேம் உள்ளிட்ட விளையாட்டுகளில் கிடைக்கும் பரிசு தொகையில் டிடிஎஸ் வரியைக் கழிக்க வேண்டும் என்பதை வருமான வரிச் சட்டத்தின் விதி 26 தெளிவாகக் கூறுகிறது..
செஸ் விளையாட்டை பொறுத்தவரை, வெற்றி பெற்ற தொகையின் அடிப்படையில் 39% முதல் 42% வரை வரி விதிக்கப்படலாம். எனவே, குகேஷுக்கும் இதே அளவுக்கு வரி பிடித்தம் செய்யப்படலாம். அதேநேரம் புதிய வரி விதிப்பின் கீழ், குகேஷின் பரிசுத் தொகையில் இருந்து சுமார் 39% அதாவது சுமார் ரூ. 4.5 கோடி கழிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிடிஜி அத்வயா நிறுவனத்தை சேர்ந்த அமித் பெய்ட் தெரிவித்தார்.
தோனியை விட அதிகம்: அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பியுள்ள குகேஷ் சுமார் ரூ. 4.5 கோடியை வரியாகச் செலுத்த வேண்டும். இந்த ரூ. 4.5 கோடி என்பது நம்ம தல தோனியின் அடுத்தாண்டு ஐபிஎல் சம்பளத்தை விட அதிகமாகும். தோனி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் இப்போது அன்கேப்ட் வீரராகவே தக்கவைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ரூ. 4 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெறுவார். அதை விட இப்போது குகேஷ் அதிக வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.