கோவை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது அந்த பங்களாவில் உள்ள தொலைபேசிக்கு வந்த உரையாடல்கள், போன் எண்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த பங்களா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவருடைய தோழி சசிகலாவுக்கும் சொந்தமானது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது இந்த பங்களா, மினி தலைமைச் செயலகம் என சொல்லலாம்.
ஜெயலலிதா ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் கோடநாடு பங்களாவுக்குச் சென்றுவிடுவார். அங்கு வைத்து முக்கிய கோப்புகளை பார்வையிடுவது, முக்கிய முடிவுகளை எடுப்பது என செய்திருக்கிறார். இந்த பங்களாவில் 24 மணி நேரமும் மின்சாரம் இயங்கும்.
இங்குள்ள தேயிலை தோட்டத்திற்கு ஜெயலலிதா நடைப்பயிற்சி மேற்கொண்டு பசுமையான சூழலை ரசிப்பார் என பலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கரென்டே போகாத பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த 60 மொபைல் போன் எண்கள், 19 மொபைல் போன் டவர் உள்ளிட்டவைகளின் விவரங்களை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து சேகரிக்க போலீஸார் முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பதிவுகள் அழிந்துவிட்டதால், அதை திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தான் சேகரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மொபைல் தகவல்களை மீட்டுத் தர குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சிபிசிஐடி கடிதம் எழுதியது.
இதையடுத்து திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கோடநாடு கொள்ளை, கொலை சம்பவம் நடந்த போது பதிவாகியிருந்த செல்போன் எண்கள், டவர்களின் தகவல்களை 10 டேப்புகளில் சேகரித்தனர்.
இந்த நிலையில் அந்த 10 மேக்னடிக் டேப்புகளில் உள்ள பொருட்களை சேகரிக்க குஜராத் தடயவியல் நிறுவனம் ஆரக்கிள் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை தொடர்ந்து கொண்டது. இந்த நிலையில் மொபைல் தகவல்களை மீட்டு சர்வரை பழைய நிலைக்கு செயல்பட வைக்க ரூ 2.94 கோடி செலவாகும் என அந்த ஆரக்கிள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனராம். இந்த பணத்தை குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகத்தினர் தர வேண்டும் என பிஎஸ்என்எஸ் அதிகாரிகள் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பணத்தை யார் செலுத்துவது என்பது குறித்து கோர்ட் உத்தரவிட்டதும் இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும். அதன் பின்னர் இந்த வழக்கு வேகமெடுக்கும் என தெரிகிறது.