ராகுலுக்கு பெரிய ‘டேமேஜ்’.. பல நாள் சுற்றிய தொகுதிகள் காலி.. பாரத் ஜோடோ யாத்திரை?

post-img

போபால்: ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்ததா? இந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. மோடி மேஜிக்கிற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் முயற்சிகள் சோடைபோயுள்ளன.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது.
ம.பியில் யார்?: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2018ல் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு 22 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறி, ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அங்கு ஆட்சியமைக்க வழி வகுத்தது. அடுத்த மாதங்களில், மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினார்கள்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அங்கு சரிவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் பலம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தங்கள் பலத்தை நிரூபிக்கும் வேட்கையில் இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
ராகுல் நடைபயணம்- காங்கிரஸ் ஜெயிக்குமா?: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கி அனைத்து மாநிலங்களுக்கும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி காஷ்மீரில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இணைந்துகொண்டார்.
மத்தியப் பிரதேச பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​ராகுல் காந்தி, மால்வா-நிமர் பிராந்தியத்தின் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர் மால்வா ஆகிய ஆறு மாவட்டங்களில் 21 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக 380 கிமீ தூரம் நடந்து சென்றார். ராகுல் காந்தி கால் பதித்த இந்த 21 தொகுதிகளில் பாஜக வசம் 14 தொகுதிகளும், காங்கிரஸ் வசம் 7 தொகுதிகளும் உள்ளன.
கர்நாடகாவில் நடந்தது: இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும், வெற்றி பெறும் சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதும் காங்கிரஸ் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடத்திய மத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களில் தேர்தல் பலன்களை அறுவடை செய்யும் என்று காங்கிரஸ் நம்பியது.
இந்த ஆண்டு கடந்த மே மாதம் வெளியான கர்நாடக தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின் நடைபயணத்தை எதிரொலித்ததாக கூறப்பட்டது. ராகுல் காந்தி தலைமையிலான பாத யாத்திரை கர்நாடக மாநிலத்தில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றது. அதில், 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கர்நாடக சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை எனும் நிலையில், பாஜக 163 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட தொகுதிகளிலும் பாஜகவே பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது.
தலைகீழா திருப்பிப் போட்டாங்களே! மத்திய பிரதேசத்தில் சுயேட்சைகளால் அலறும் காங்கிரஸ், பாஜக! என்ன கதை?
ராகுல் பிரச்சாரம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "இன்று மத்தியப் பிரதேசம் ஊழலின் தலைநகராக உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா அரசு பெருத்த ஊழலில் ஈடுபடுகிறது. பாஜக தலைவர்களின் கொள்ளையினால் மாநில மக்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ம.பி மாநிலத்தில் 18,000 விவசாயிகள் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
2018 தேர்தலுக்குப் பிறகு ம.பி.யில் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 27 லட்சம் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்காக உழைக்கத் தொடங்கிய தருணத்தில், பெரிய தொழிலதிபர்களுடன் கூட்டுச் சேர்ந்து, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடை உரிமையாளர்களின் அரசை பாஜக திருடியது. மீண்டும் ஆட்சிக்கு வந்தது." என்று பேசியிருந்தார்.
ரிசல்ட் சொல்லும் சேதி: ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் 16 நாட்களும், ராஜஸ்தானில் 18 நாட்களும் பயணம் செய்தார். அதே நேரத்தில் அவர் தெலுங்கானாவில் 12 நாட்களுக்கும் குறைவாகவே தங்கியிருந்தார். இதில், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சியும் இருந்தது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த மாநிலங்களில் பெரிதாக பலன் அளிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ராகுலின் முயற்சியால் காங்கிரஸ் மீண்டும் வலுப்பெறும் என்று ராகுல் யாத்திரையின்போது யூகங்கள் எழுந்தன. எனவே, கர்நாடகா, இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகளை இதனுடன் இணைத்து, இந்த தேர்தலிலும் காங். வெல்லும் என கூறப்பட்டது. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உட்பட காங்கிரஸின் கணக்குகள் அனைத்தும் பொய்த்துப் போனதை நிரூபித்துள்ளது.
மோடி மேஜிக்: மோடி மேஜிக்கிற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் முயற்சிகள் சோடைபோயுள்ளன. ராகுல் பயணம் செய்த மாவட்டங்களிலும், காங்கிரஸ் சோபிக்கவில்லை. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், குஜராத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பரசுராம் குண்ட் வரை ராகுல் தலைமையில் மற்றொரு பேரணியை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்றைய ரிசல்ட் காங்கிரஸின் நம்பிக்கையை நிச்சயம் அசைத்துப் பார்க்கும்.
 காங்கிரஸுக்கு “ஜன கண மன”? கையில் இருந்த ரெண்டும் போச்சு.. அடி மேல் அடி.. இந்த லிஸ்ட்டை பாருங்க!

 

Related Post