திருப்பூர்: அம்பேத்கரின் புகழை குறைப்பது கண்டிக்கத்தக்கது என ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சிபிஆர் ஆளுநராக இருந்தாலும் பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு பிறகு மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாகவே பேசும் நிலையில் அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த ராதாகிருஷ்ணனை பெரியாரிஸ்ட்டுகள் பாராட்டி வருகிறார்கள்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தினமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பாஜக மாவட்டச் செயலாளர் கார்த்திக் என்பவரது ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜை நடந்தது.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்றால் அது அம்பேத்கர்தான்.
அரசியல் சாசனத்தை இயற்றிய அம்பேத்கரின் புகழை குறைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்கள் நலனிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தும்.
ஆனால் இதற்கு தமிழகம்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி குழந்தை பெறுவது தாயின் உடல்நலனிற்கு கேடு என்பதை போல், அடிக்கடி தேர்தல் நடத்தினால் பொருளாதார முன்னேற்றத்திற்கான கேடு என்பதை நாம் உணர வேண்டும்.
சீமான் நேற்றைய தினம் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷாவிற்கு நினைவஞ்சலி செலுத்தினார். அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? இந்த சமூகத்தில் உள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் சீர்குலைய வேண்டும் என நினைப்பவர் அவர். ஒரு தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம் தமிழக அரசு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை பாராட்டுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய போது , எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது இப்போது பேஷனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால் உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும் என பேசியிருந்தது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்களை வலுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினணர் ஜெய் பீம், ஜெய் பீம் என முழக்கமிட்டதால் அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததே! எனது கருத்தை காங்கிரஸ் கட்சியினர் திருத்தி வெளியிடுகிறார்கள். அம்பேத்கர், அரசியலமைப்பு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிரானது காங்கிரஸ். அம்பேத்கரை எதிர்த்து வந்தது காங்கிரஸ் தான். காங்கிரஸ் வீர் சாவர்க்கரையும் அவமதித்தது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசியலமைப்பை முழுமையாக சீர்குலைத்தது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்திருந்தார்.